கதவைத்
தட்டும் ஓசை ஏதோ கனவில் ஒலிப்பது போல் இருக்க.. மீனா மெதுவாகக் கண்களைத்
திறந்தாள். இரவு வெகுநேரம் வரையில் உறக்கம் வராமல் அமர்ந்தே இருந்ததால் உடல்
அசதியில் கண் இமைகள் அவளையும் அறியாமல் மெதுவாக மூடிக் கொண்டன. மீண்டும் கதவைத்
தட்டும் ஓசை!
சட்டென்று
எழுந்தாள். தான் எங்கிருக்கிறோம் என்பதை அறியச் சில வினாடிகள் பிடித்தன. ஜன்னலில்
செந்நிற ஒளித்துகள்கள் விடியலை அறிவித்தன. மீனா எழுந்துவந்து கதவைத் திறந்தாள்.
நடுத்தர வயது பெண்மணி ஒருத்தி.. 'ஐயா.. உன்ன கௌம்பச் சொன்னார். கல்யாணத்துக்குப்
போவணுமாம்." என்றாள்.
அவள்
காட்டிய வழியில் புறக்கடைக்குச் சென்று காலைக் கடன்களை முடித்துக் கொண்டு எதிரில்
வந்தப் பெண்ணிடம் காபி கேட்டாள். அடுத்த இரண்டாவது நிமிடத்திலேயே காபி கொண்டு வர..
வாங்கிப் பருகிக் கொண்டே வீட்டை நோட்டமிட்டாள்.
அது பெரிய
பங்களாவைப் போல் அமைக்கப்பட்ட பழங்கால வீடு. அதன் ஓர் அறையில் தான் இரவு
தங்கியிருந்தாள். ஆனால் நேற்று அவள் இதையெல்லாம் கவனிக்கவில்லை. அதற்கு நேரமும்
இல்லை!
வராண்டாவில் இருந்த பெரிய புகைப்படத்தில் தேனப்பன் இளஞராகத் தன் மனைவி
கையில் குழந்தையுடன்! அநேகமாக அந்த குழந்தை வெற்றிவேலாக இருக்கும். அப்படத்திற்கு
இருபுறமும் வெற்றிவேல் கண்மணியின் தனித்தனி புகைப்படம்!
அதற்கு
கீழ் இருந்த பழங்கால அரைஅலமாரியின் மேல் கண்மணியும் மீனாவும் சேர்ந்திருந்தப்
புகைப்படம்! கல்லூரி நிகழ்ச்சியில் எடுத்திருக்க வேண்டும். மீனா தனக்குள் தானே
சிரித்துக் கொண்டாள்.
'என்ன
மீனா..? ஒனக்கு
நீயே சிரிச்சிக்கிற..?" கேட்டபடி வெற்றிவேல் அடுத்த அறையிலிருந்து வந்தான். வெள்ளை
வேட்டிச் சட்டையில் பளீச்சென்று இருந்தான்.
'இல்ல..
மனுஷனோட உருவத்துக்கும் கொணத்துக்கும் நடந்துகிற மொறைகளுக்கும்.. எவ்வளவு
வித்தியாசங்கள வச்சி படைக்கப் பட்டிருக்காங்க பாருங்க! சிங்கத்த பாக்கும் போது
அழகாயிருக்கு! ஆனா.. ஆபத்தானது. யானைய பாருங்க.. பாக்க பயமா இருக்கும்! ஆனா.. அது
அமைதியானது. எதவச்சி ஒருத்தரோட குணாதிசயங்கள புரிஞ்சிக்கிறதுன்னு தெரியல
வெற்றிவேல்." என்றாள்.
அவன் அவளை
உற்றுப் பார்த்தான்.
'மீனா..
மனுஷனுங்க உருவத்தால எத்தனையோ மாற்றத்தோட இருக்கலாம். ஆனா எல்லாருக்குமே மனசுன்னு
ஒன்னு இருக்குது. அதுல ஏதாவது ஒரு காயம் வேதனைய கொடுத்துக்கினு தான் இருக்குது.
ஆனா மீனா.. நீ ஆறிப்போன காயத்துக்கு மருந்து போட நெனைக்காத. வேஸ்ட். வா போலாம்.
ஆத்தூர்காரங்க வந்துட்டாங்களாம்." என்றான்.
அவள்
யோசனையுடன் தலையாட்டினாள். அவன் சொன்னது ஏதோ புரிந்தது போலவும்.. அதே சமயம்
புரியாதது போலவும் இருந்தது.
கிளம்பியவன் நின்றான். 'மீனா.. ஒரு கண்டீஷன். கல்யாணம் முடியிறவரைக்கும் நீ
எம்பக்கத்துல தான் இருக்கணும். சரியா..?" அவள் 'சரி" என்பதற்கு அடையாளமாகத் தலையாட்டினாள்.
சிந்திக்கும் பொழுது வார்த்தைகள் மறைந்து செய்கைகள் மொழிகளாகி விடுகிறது.
ஓடத்தூர்
கோவில் மிகப் பழமையானதாக இருந்திருக்க வேண்டும். கருங்கள் துண்கள். கல்யாண மண்டபத்
துண்களில்.. தேய்ந்து போன கற்சிலைகள். சிமென்ட் கற்களால் செப்பனிடப்பட்ட சில
இடங்கள்! பட்டுப் புடவையில் கிழிச்சலை மறைக்க ஒட்டு வைத்துத் தைத்தது போல்..!!
மணவறை
பூச்சரங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. எதுவும் அவசர அவசரமாகச் செய்யப்பட்டது
போல் இல்லை. ஊரே கோவிலில் கூடி இருந்தது. எல்லோரும் கூடிச் செய்தால் எதுவுமே
சுலபம் தானே..!
கோவிலுக்கு
வெளியில் ஒரு சொகுசு தனியார் பேரூந்து நின்று கொண்டிருந்தது. ஆத்தூர்க்காரர்கள்
அதில் வந்ததாக வெற்றிவேல் சொன்னான். தனதூர்க்காரர்களைக் கண்களால் தேடினாள். யாரும்
கண்களில் படவில்லை. வெற்றிவேலிடம் கேட்கலாமா என்ற நாவை அடக்கினாள்.
ஆனால்
சற்று நேரத்திற்கெல்லாம் மேளதாளத்துடன் பெண்ணை அழைத்துக் கொண்டு கோவிலுக்குள்
நுழைந்தார்கள். எல்லோருடைய பார்வையும் மீனாவின் மேல் பதிந்தது. மீனா முகத்தில்
எந்த உணர்ச்சியையும் காட்டாமல் வெற்றிவேல் அருகில் நின்றிருந்தாள்.
சக்திவேல்
மீனாவின் அருகில் வந்தான். அவள் முகத்தை அருகில் பார்த்ததும் கண்கள் சுருங்கின.
'என்ன மீனா
நெத்தியில காயம்..? முகமெல்லாம் வீங்கி இருக்குது. யாராவது அடிச்சாங்களா..?"
கோபமாக
வெற்றிவேலை முறைத்துக் கொண்டே கேட்டான். அவன் மீது கோபத்துடன் இருந்தவள் அவன்
குரலைக் கேட்டதும் சூரியனைக்கண்ட பனியாக உருகினாள். ஆனால் முகத்தையும் மனத்தையும்
கடினப்பட்டு இறுக்கினாள்!
'என்னை
யாரும் அடிக்கல. நீங்க உங்க வேலைய பாருங்க." பற்களைக் கடித்துக் கொண்டு சொல்ல
வெற்றிவேல் சிரித்துக் கொண்டான். ஏளனச் சிரிப்பு!!
சக்திவேலுவின்; முகம் சிவந்தது. அதைக்கண்டும் காணாததைப் போல.. வெற்றிவேல் புடவை நகைகள் இருந்த
தட்டை எடுத்துச் சக்திவேலிடம் நீட்டினான்.
'தப்பூ
ரெண்டு பேர்மேலயும் தான். என் தம்பி செஞ்ச தப்புக்கு பிராய்சித்தமா அந்த பொண்ண
நாங்க ஏத்துக்கறோம். அதுக்காக உங்கக் கூட ஒட்டிஒறவாட நெனைக்கிறோம்ன்னு யாரும்
நெனச்சிட வேணாம். உங்க பொண்ணு போட்டிருக்கிற பொடவ நகை எல்லாத்தையும் நீங்களே
எடுத்துக்கினு இந்தப் பொடவை நகைகளப் போட்டு அனுப்புங்க. எங்களுக்குப் பொண்ண
மட்டும் குடுத்தா போதும்." என்றான். அவனுடைய கர்வம் பேச்சில் தெரிந்தது.
சக்திவேல்
எதையும் பேசாமல் தட்டை வாங்கிக் கொண்டான். ஒரு காரியத்தின் முடிவு தான் வெற்றியைத்
தரும். நடுவில் தோன்றிமறையும் பிரச்சனைகளை அலட்சியப் படுத்தினாலே போதும் என்பது
அவனுக்குத் தெரியும்.
சில
இடங்களில் மனிதன் வெற்றி பெருவதைவிட மதிப்பு மிக்கவனாகக் காட்டிக் கொள்வதும்
சிறந்த வழிதானே..!
வெற்றிவேல் இன்னொறு தட்டை எடுத்து மீனாவிடம்
நீட்டினான். 'மீனா இதெல்லாத்தையும் நீ போட்டுக்கோ." என்றான்.
'எனக்கா..?
எனக்கெதுக்கு..?"
மீனா
அதிர்ச்சியாகக் கேட்டாள்.
'கல்யாணம்
நடக்க போவுது. நீ இப்டி கழுத்து கை காதுல எதுவும் போடாம.. வெள்ளப் பொடவயோடவா இருப்ப?"
'ஏன்..?
இதுதானே என்னோட
நிரந்தரம்." அவள் இப்படிச் சொல்ல.. எல்லோரும் அவளைப் பாவமாகப் பார்த்தார்கள்.
'ஐமீன்.. நா
ஒரு டாக்டரோட அசிஸ்டன்டட். எனக்கு இது தான் யூனிபார்ம். தவர.. வேலவிசயமாத்தான்
நான் இந்த ஊருக்கே வந்தேன். எனக்கு இதெல்லாம் வேண்டாம் வெற்றிவேல்." என்றாள்
சாதாரணமாக.
'சரி.
வெறும் பொட்டாவது வச்சிக்கோ." குங்குமச் சிமிழை எடுத்து நீட்டினான். மீனா
வேதனையுடன் சக்திவேலுவைப் பார்த்தாள். அவனும் இவளைப் பார்த்துக் கொண்டு தான்
நின்றிருந்தான்.
'வேணாம்
வெற்றிவேல். பொட்டு வைச்சிக்காதவங்க எல்லாம் விதவைன்னு நெனச்சிடாதீங்க."
என்றாள்.
வெற்றிவேல்
ஒரு பெருமூச்சுடன் 'அப்புறம் உன்னிஷ்டம்" என்று சொல்லி விட்டுவிட்டான்.
உன்விருப்பம் என்று சொல்லி முடித்துவிடுவது மற்றவர்களுக்கு விருப்பம் இல்லை
இதில் என உணர்த்துவது தானே..!
கெட்டி
மேளம் முழங்க லட்சுமணன் ராதிகா கழுத்தில் மூன்று முடிச்சிப் போட்டான்.
அட்சதையைக்
கைநிறைய வாரிப் போட்டாலும் மீனா மனத்துக்குள் சிரித்துக் கொண்டாள்.
திருமணம்..
சமுதாயம் திருப்தி அடைவதற்காக ஏற்படுத்தப்பட்ட சம்பிரதாய சேர்க்கை என்பது அவள்
எண்ணம்! மனிதன் தன் துணைவரின் மீது வைக்காத நம்பிக்கையைக் கழுத்தில் கட்டியத்
தாலியின் மீதோ.. விரலில் அணியும் மோதிரத்தின் மீதோ.. காகிதத்தில் போடும்
கையெழுத்தின் மீதும் வைக்கிறான்!
நம்பிக்கையற்ற கூட்டு முயற்சி தான் திருமணம்.
ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற மனதளவில் வாழ முடியாதா..? அதற்கோர் அடையாளம் அவசியம் தானா..?
கேட்ட மனத்தை
அடக்கினாள்.
எப்படிப்
பட்ட நாத்தீக வாதிகளுக்கும் இதில் நம்பிக்கை இருக்கிறது என்பதை எண்ணும் பொழுது
நாம் எம்மாத்திரம்?
பெருமூச்சுடன் தன் கைவிரலைப் பார்த்தாள். மோதிரம் இல்லாத வெற்றுடலாய் விரல்கள்!
சிரிப்பு வந்தது. ஆமாம். மனிதர்களுக்குத் திருமணம் என்ற அடையாளம் அவசியம் தான்
என்ற மனத்துடன் நிமிர்ந்து சக்திவேலைப் பார்த்தாள். அவன் மட்டுமல்ல.
வெற்றிவேலுவும் இவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
மணப்பெண்
ராதிகா ஒவ்வொருத்தர் கால்களிலும் விழுந்து எழுந்தாள். பூக்களைப் பார்த்து
ஏங்கியவளின் தலையில் இன்று ஏகப்பட்ட பூக்கள்! ஆனால் முகம் வாடி இருந்தது!
மீனாவின்
எதிரில் வந்து நின்றவள் கை கூப்பிக் கும்பிட்டாள். கண்களில் கண்ணீர் வழிந்தது.
அவள் மன்னிப்பு கேட்கிறாளா..? நன்றி சொல்கிறாளா..? புரிந்து கொள்ளமுடியாதப் பார்வை
அவள் கண்களில் தெரிந்தது.
மீனாவைவிட
நான்கைந்து வயது அதிகமாக இருக்கும்! அதற்குள் எத்தனை வர்ணங்களைப் பூசிக்கொண்டாள்?
கிணற்றடிக்குக்
குடத்துடன் வருபவளின் கண்கள்.. மல்லிக் கொடியின் மீது பூத்திருக்கும் மல்லிகையின்
மீதும்.. வீட்டோரம் நடப்பட்ட கனங்காமரத்தின் மீதும் நிலைத்து நின்று வேதனையுடன்
வேடிக்கை பார்க்கும். விதவைகளின் ஏக்கம் பூக்களில் மட்டும் தானா..? மற்ற விசயங்கள் ஊமை கண்ட கனவு போலத்தானே..
படர இடம்
இல்லாத முல்லைக் கொடிக்குப் பாரியாக லட்சுமணன் இன்று! முல்லைக்குத் தேர் கொடுத்த
பாரியைவிட ஒரு விதவைக்கு வாழ்க்கை கொடுத்த லட்சுமணன் மீனாவின் மனத்தில் உயர்ந்து
நின்றான்.
'எனக்கு
நன்றி சொல்ல வேணாம். ஒம்புருஷனுக்கு மொதல்ல நன்றி சொல்லு." என்று
சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள்.
சுகுணாவதி
மணமக்களை அழைத்துக் கொண்டு கிளம்ப ஆத்தூர்க்காரர்கள் அனைவரும் பேரூந்தில்
ஏறினார்கள். வெற்றிவேலுவின் அருகில் நின்றிருந்த மீனாவிடம் சக்திவேல் வந்தான்.
புன்னகையுடன் 'வா மீனா. போவலாம்" என்றழைத்தான்.
'நா வரல.
நீங்க கௌம்புங்க." மீனா பட்டும் படாமலும் சொன்னாள்.
'இல்ல மீனா.
நீ இப்போ எங்கூட வந்துதான் ஆகணும்." சொல்லிக் கொண்டே அவன் மீனாவின் கையைப்
பிடிக்க.. உடனே வெற்றிவேல் தடுத்தான்.
'அவ
இங்கத்தான் இருப்பா.. நீ கௌம்பு." என்றான்.
'அத சொல்ல
நீ யாரு? மீனா
வா. போலாம்" சக்திவேல் மீனாவின் கையை மீண்டும் பிடிக்க.. வெற்றிவேல் தடுத்து
அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்தான். இவனும் அவன் சட்டையைப் பிடிக்க.. பேரூந்தில்
இருந்தவர்கள் உடனே இறங்கி ஓடிவந்தார்கள். வெற்றிவேலுவின் ஆட்களும் தான்!
மீனா
சூழ்நிலை புரிந்து கோபத்துடன் இருவர்
நடுவிலலும் வந்து நின்றாள்!
'வெற்றிவேல் சக்திவேல் ரெண்டு பேரும் சட்டைய வுடுங்க. இப்போ எதுக்காக
சண்ட? எனக்காகவா..?
வேணாம் நா இங்க
யார்கூடயும் இருக்கப் போறதில்ல. நா என்னோட வேலைய பாக்க கௌம்பிடுவேன். எனக்காக
யாரும் சண்ட போட வேணாம்."
இருவரும்
சட்டையை விட்டார்கள். சக்திவேல் திரும்பி சேகரிடம் எதுவோ செல்ல.. வெற்றிவேல்
மீனாவைப் பார்த்தான்.
'மீனா..
புடிவாதம் புடிக்காத. நீ எங்கையும் போவக் கூடாது. போவவும் வுட மாட்டேன். நீ என்னோட
தம்பி பொண்டாட்டி. அது மட்டுமில்ல. இனிமேல நீ எங்க போனாலும் உன்னோட உயிருக்கு
ஆபத்து தான். நீ என்னோட பாதுகாப்புல இருக்கறது தான் நல்லது." என்றான் குரலைத்
தன்மையாக்கி.
எறிகிற
அகல்விளக்கை மூடி போட்டுப் பாதுகாக்க முடியாது. இது காற்றுப் பலமாக அடித்தாலும்
அணைந்துவிடும். காற்றே இல்லை என்றாலும் அணைந்துவிடும். மீனாவின் வாழ்க்கை எறிகின்ற
அகல்விளக்கைப் போலத்தான் ஆகிவிட்டது.
மீனா
வெற்றிவேலுவை நிமிர்ந்து பார்த்தாள்.
'வெற்றிவேல்..
உங்க மனசாட்சிய தொட்டு சொல்லுங்க. உங்க தம்பி செத்ததுக்கு நானா காரணம்?"
அவன் பதில்
சொல்லவில்லை. இவள் தொடர்ந்தாள்.
'நான் அவரோட
பொண்டாட்டின்னு சொன்னீங்க. சொல்லுங்க. நா அவர் கூட எத்தன நாள் வாழ்ந்தேன்? எதுக்காக எனக்கு தண்டனை
தரணும்? நீங்க
எதுக்காக என்ன காப்பாத்த நெனைக்கணும்? என்னால அப்பா புள்ளைக்குள்ள விரோதம் வளருணுமா..?
நல்லா யோசிச்சி
பாருங்க வெற்றிவேல்." என்றாள். அவன் பேசாமல் நின்றிருந்தான்.
மனசாட்சி
சில நேரங்களில் வீரனைக்கூட கோழையாக்கி விடுகிறது. ஆனால் நல்லவைகள் மட்டும் நடக்க
நல்ல மனசு மட்டும் இருந்தால் போதுமே.. வீரம் அவசியம் இல்லை தானே..!
திடிரென்று
அவள் பக்கத்தில் யாரோ முணுமுணுப்பது போன்ற ஓசை வரவும் திரும்பிப் பார்த்தாள்.
ஆத்தூர் ஐயர் மந்திரத்தை ஓதிக் கொண்டிருந்தார். அவர் அருகில் சக்திவேல் கையில்
தாலியுடன் கூடிய மஞ்சள் கயிற்றுடன்!
புரியாமல்
சக்திவேலைப் பார்த்தாள். அவன் வெற்றிவேலைப் பார்த்து சொன்னான். 'வெற்றிவேல்.. அன்னைக்கி
இவ எனக்குத்தான் சொந்தம்ன்னு சொல்லி மோதரம் போட்டேன். ஆனா அதையும் மீறி ஒந்தம்பி
இவ கழுத்துல தாலிய கட்டினான். இப்போ அவனும் இல்ல. அங்க நடந்தது கல்யாணமும் இல்ல.
அதனால தோ இப்ப ஒம்முன்னாலேயே இவ கழுத்துல தாலி கட்டுறேன். உன்னால முடிஞ்சத
பாத்துக்கோ."
சொல்லிக்
கொண்டே ஐயர் மந்திரம் ஓத.. மற்றவர்கள் அட்சதை தெளிக்க.. சக்திவேல் மீனாவின்
கழுத்தில் தாலியைக் கட்டினான். ஏற்கனவே எல்லோரும் பேசி முடிவு எடுத்து நடந்து
முடிந்த கல்யாணம்! இதை எதையும் அறியாத மீனா கோபத்துடனும் குழப்பத்துடனும்
சிறகொடிந்த பறவையாக.. செய்வதறியாது நின்றுவிட்டாள்.
வண்டை
ஏமாற்றிப் பூவைப் பறித்தச் சந்தோஷம் சக்திவேல் முகத்தில்! ரோஜா தனக்காக
இருக்கிறது. அதனால் அல்லியை உரிய இடத்தில் சேர்பித்துவிட்ட திருப்தி
வெற்றிவேலுவின் முகத்தில்!
எதிர்க்க
வந்த ஆட்களை நிறுத்தியது அவனின் கட்டளைப் பார்வை. சக்திவேல் மீனாவின் கையைப்
பிடித்து இழுத்துக் கொண்டு போய் வண்டியில் ஏற்றினான். மீனாவும் ஏற பேரூந்து
அனைவரையும் ஏற்றி கொண்டு கிளம்பியது. வெற்றிவேல் மனத்துக்குள் சிரித்து கொண்டான்.
(தொடரும்)
Pogap pogap puriyum! :)
ReplyDeleteஅடிச்சி தூள் கிளப்புங்க!!!!
ReplyDeleteதீடீர்த்திருபமாய் எல்லோரு சம்மதத்துடனும் சக்திவேல் மீனா திருமணம்.
ReplyDeleteஅசத்தல்