Sunday, 10 February 2013

போகப் போகத் தெரியும் - 38





   ஆரத்தி எடுத்தார்கள். குங்குமக் குழம்பானக் குளத்தில்.. மிதக்கும் இலைக்கு நடுவில் நெருப்புத் தாமரையாகக் கற்பூரம் எறிந்தது. நீர்திலகமிட்ட பின்பு 'உள்ள வா மீனா.." சொல்லிக் கொண்டே சக்திவேல் வீட்டினுள் நுழைந்தான்.
   மீனா வாசல்படிக்கு அடுத்தப் பக்கமாக நின்று கொண்டே இருந்தாள். 'வலதுகால எடுத்துவச்சி உள்ள வாம்மா.." மாதவனின் தாய் அழைத்தாள். மீனா நின்று கொண்டே இருந்தாள்! உள்ளே போன சக்திவேல் திரும்பி அவளைப் பார்த்தான். கண்களில் கேள்வியுடன்.
   'கூப்பிட வேண்டியவங்க வந்து கூப்பிடட்டும்." அழுத்தமாகச் சொன்னாள். அவள் யாரைச் சொல்கிறாள் என்று புரியாதவனாகப் பார்த்தான்.
   'அதான் ஒன்னழக காட்டி எம்புள்ள கையால தாலி கட்டிக்கினியே.. இன்னும் இன்னா வேணுமாம்..? அவளையே உள்ளாற வரச் சொல்லு." அகிலமண்டேசுவரியின் குரல் மட்டும் வந்தது.
   மீனா பேசாமல் நின்றிருந்தாள். முகத்தில் எள்ளைப்போட்டால் வெடித்துவிடும் அளவு சூடேறிச் சிவந்து இருந்தது.
   'மீனா புடிவாதம் புடிக்காத. உள்ள போ. ஒன்ன யாரும் கூப்ட வேண்டிய அவசியம் இல்ல. இது ஒன்னோட வூடுமா இனிமே.." கூட்டத்தில் ஒரு பெண் சொன்னாள்.
   'இன்னும் ரெண்டு நிமிஷம் இங்க நிக்கிறேன். அவங்க வந்து என்ன கூப்பிடலன்னா.. நா இப்படியே போயிடுறேன்."
   இரண்டு நிமிடம் சீக்கிரத்தில் கரைந்து போனது. மீனா திரும்பிப் படியில் இறங்கப்  போக..
   'மீனா.. உள்ள வா.." அகிலாண்டேசுவரி அம்மாள் கையில் ஆரத்தியுடன்! சக்திவேல் அவளருகில் வந்து நிற்கச் சுற்றினாள்.
   'ஒனக்காக இல்லடீ. எம்புள்ளைக்காகத் தான். உள்ள வா." சுற்றிய நீரைத் தொட்டு நெற்றியிலிட்டாள்.
   மீனா உள்ளே வரவும் தொலைபேசி அழைக்கவும் சரியாக இருந்தது. எடுத்து பேசிய மாதவன் மீனாவிடம் கொடுத்தான்.
   'ஆமாம் டாக்டர். நேத்து ஒரு சின்ன ப்ராபளம். அதனாலத் தான் டெலிபோன் பண்ண முடியல. இல்ல டாக்டர். இன்னம் கொஞ்ச நேரத்துல நா வந்துடுறேன். ஓ கே டாக்டர். ம்.. பாக்கலாம்.."
   பேசிமுடித்தவள் தொலைபேசியை அதனிடத்தில் வைத்துவிட்டு திரும்பிச் சக்திவேலுவைப் பார்த்தாள்.
   இப்பொழுது அனைவரின் பார்வையும் அவள் மேல் தான்!
   'என்ன அழைச்சிக்கினு போய் க்ளீனிக்குல விட்டுடுறீங்களா..?"
   'எதுக்கு..?"
   'என்ன இது கேள்வி? நா அங்க வேல செய்யிறன்;."
   'ஆமா.. வேல செஞ்சத்தான். அது வேற விசயம்;. ஆனா இப்போ நீ என்னோட  பொண்டாட்டி. என்னோட பொண்டாட்டிய என்னால இனிமே வேலைக்கி அனுப்ப முடியாது."
   'சக்திவேல்.. நீங்க எனக்குத் தாலிய கட்டிட்டதால என்ன அடிமை படுத்த முடியாது. ஆமா.. உங்கள யாரு எனக்குத் தாலி கட்ட சொன்னது..? நீங்களும் அந்த வேந்தன போலத் தான நடந்துக்கினீங்க..!
   அவள் சொல்ல அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தான் சக்திவேல்!!
----------------------------------------------------------------------------------------------------------------        

   வார்த்தைகள் வெளியில் வந்தால் தான் நியாயமான உண்மைகளை விளங்கச் செய்ய முடியும்!
   வேந்தன் மீனாவிற்கு கைகளைக் கட்டி இரண்டு பேர் பிடித்து கொள்ளத் தாலியைக் கட்டினான். சக்திவேல் இப்படியெல்லாம் வற்புருத்தாமல் தாலியைக் கட்டினாலும் அவளைக் கேட்காமலேயே செய்தான். தவறு தானே?
   தவறு தான்! அவன் அவளிடம் மட்டுமா கேட்காமல் தாலியைக் கட்டினான்? 'என் மகன் மனசுல வேற ஒரு பொண்ணு இருக்கிறா. இத மனசுல வச்சிக்கோ. பணத்துக்காக எம்மவன் தான் உம்புருஷன்னு சொல்லிகிட்டுத் திரியாத." என்று சொல்லிய அகிலாண்டேசுவரியின் ஆணையை மீறி.. அதிலும் இன்னும் இரண்டு வருடம் கழித்துத் தான் திருமணம் நடத்த வேண்டும் என்று ஜாதகம் சொல்லியதால்.. ஜோசியர் வாக்கு தான் தெய்வ வாக்கு என நினைத்து வாழும் அவன் அன்னையையும் அல்லவா மதிக்காமல் நடந்து கொண்டிருக்கிறான்!
   இது மிகப் பெரிய தவறு இல்லையா..? இங்கே அவள் சொல்லித் திட்டியதை வெளிச்சம் போட்டா காட்ட முடியும்? நடந்தது நடந்து விட்டது என்று சாதாரணமாக எண்ணிக்கொள்ள நினைத்தாலும் அந்த அம்மாள் வாயில் விழுந்து அரையப் போவது அவள் தானே..!
   அதனால் வந்த பயம். மனத்தில் இருந்த ஆசைகளையும் மீறி ஆவேசமாக வந்து விழுந்த வார்த்தைகள்!
   'நீங்களும் அந்த வேந்தனை போலத் தானே நடந்துக்கினீங்க?"
   சக்திவேல் அவள் நினைத்தது போல் அதிர்ச்சியடையவில்லை. நிதானமாகக் கேட்டான்.
   'நானும் அந்த வேந்தனும் ஒன்னா..?"
   'ஆமாம். எனக்குன்னு எவ்வளவோ லட்சியங்க எதிர்பார்ப்புகள் இருக்குது. உங்க குடும்பத்துலேயும் நெறைய எதிர்ப்பு இருக்குது. அப்டி இருக்கும் போது நீங்க எதுக்காக என்ன கேக்காம எங்கழுத்துல தாலிய கட்டினீங்க?"
   'உன்னோட லச்சியம் என்ன? படிக்கிறதுதான..! படி. எதிர்பார்ப்பு என்ன..? மத்தவங்களுக்கு சேவை செய்யறது தான..? அத இந்த ஊர்காரங்களுக்குச் செய்யி. என்னோட குடும்பத்துல எனக்கு எதிரா யாரும் நடந்துக்க மாட்டாங்க. போதுமா..? உனக்கு வேற என்ன வேணும்..?" நிதானமாகக் கேட்டான்.
   ஆடுகிற மாட்டை ஆடித்தான் கரக்க வேண்டும். ஆனால் ஆவேசம் வந்தவளை.. அமைதியாகவே அடக்கலாம்.
   'எனக்குச் சுதந்திரம் வேணும். இந்த மாதிரி தாலிக்கெல்லாம் என்னால அடிமையா வாழ முடியாது. நா எப்போதும் போல வேலைக்கி போவணும்." வார்த்தைகள் நெருப்புத் துண்டுகளாக..
   சக்திவேல் யோசனையுடன் அவளைப் பார்த்தான். 'அவ இப்டிபட்ட திடிர் கல்யாணத்துக்கு எல்லாம் ஒத்துக்க மாட்டா.. பின்னாடி ஏதாவது பிரச்சன வரப்போவுது.." என்று சொன்ன நண்பர்களின் பேச்சையும் மீறித்தான் தன் தாயின் அனுமதியுடன் அவளுக்குத் தாலிக் கட்டினான்!
   அவள் எப்பொழுது ஓடத்தூரில் மாட்டிக் கொண்டாளோ.. இனி அவள் தன்னுடன் இருப்பது தான் பாதுகாப்பு.. என்ற எண்ணத்துடனும் அதே சமயம் அவள் தன் மனைவியாகிவிட்டால் தன்னுடனே இருந்து தன் பேச்சைக் கேட்டு நடப்பாள் என்றும் நினைத்து தான் அவன் அவளை கேட்காமல் தாலியைக் கட்டினான். ஆனால்..?
   ஒரு பெருமூச்சுடன் அவளருகில் வந்தான்.
   'மீனா.. நா ஒனக்குத் தாலி கட்டனது நீ எனக்கு உரிமையானவளா இருக்கணும்ன்னு நெனச்சித்தான் கட்டினேன். ஆனா அதை நீ அடிமைச் சின்னம்ன்னு நெனச்சா.. தயவு செஞ்சி கயட்டி குடுத்துடு. நீ தான் தாலியைக் கழற்றி எறிஞ்ச புரட்சி பெண்ணாச்சே.. ஒனக்கு இது பெரிசா படாது. நாங்களும் யாரும் தப்பா நெனச்சிக்க மாட்டோம். குடு." அவளெதிரில் கையை நீட்டினான். மீனா பேசாமல் நின்றிருந்தாள்.
   'என்ன மீனா..? தயக்கமா இருக்குதா..? சரி. நான் தான் உன்னோட விருப்பம் தெரிஞ்சிக்காம தாலி கட்டிட்டேன். அது என்னோட தப்புத்தான். நா உன்ன விரும்புன மாதிரியே நீயும் என்ன விரும்புனன்னு தப்பா புரிஞ்சிக்கிட்டேன். மன்னிச்சிடு. நீ இங்கிருந்து போனபிறகு என்னன்ன மாற்றங்கள் நடந்திருக்கும்ன்னு நான் யோசிக்கல. என்னோட தப்புதான். அதனால நாங்கட்டிய தாலிய நானே கழுற்றிடுறேன். நீ எப்பவும் போல இருந்துக்கோ."
   சொல்லிக் கொண்டே அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்தத் தாலியைக் கயற்றுடன் பிடித்தான்! மீனா சட்டென்று அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.
   இந்திய நாட்டில் கற்பு  ஒழுக்கம்  காதல்  காமம்  என அனைத்துமே பண்பாடு கலாச்சாரக் கடலில் கலந்திருக்கும் உப்பு போன்றது. காய்ச்சினால் வரும் நீராவி கூட உப்பு கரிக்கும்!!
   அவன் காலில் விழுந்தாள்.
   'என்ன மன்னிச்சிடுங்க. உங்க அம்மாவோட விருப்பம் இல்லாம எனக்கு தாலி கட்டிட்டீங்களேன்னு தான் இப்டி கோவமா பேசிட்டேன். சாரி.."
   சக்திவேல் அவளைத் தூக்கிவிட்டான்.
   'மீனா.. தாலி அடிமை சின்னம் கிடையாது. அது ஒரு அடையாளச் சின்னம். தாலிய கட்டிக்கினே தப்பு செய்ய முடியாதா என்ன..? இல்ல.. சுதந்திரமா இருக்க முடியாதா..? மீனா.. நம்மோட பண்பாடும் கலாச்சாரமும் கை வெலங்கு கெடையாது. அது நம்மோட மனசுக்கு நமக்கு நாமே போட்டு கொள்ளுற கட்டுப்பாடு. அத மீறி நடந்துக்கறது நாகரீகம் கெடையாது."
   அவள் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டான்.
   'போ.. போயி முகம் கழுவிட்டு டிரெஸ் மாத்திக்கினு வா.. எதையும் மனசுல வச்சிக்காத." என்றான்.
   மீனா அவனை நிமிர்ந்து பெருமையுடன் பார்த்தாள். மனசு இலேசானது போல் இருந்தது. 'ம்.. போம்மா.." என்றான்.
   மீனா உள்ளே போனதும் தான்.. மற்றவர்களின் முகத்தில் மகிழ்ச்சி வெளிப்பட்டது. இவ்வளவு நேரம் ஏதோ நெருப்பின் மீது நின்று கொண்டிருந்தது போல் இருந்தார்கள்!


   உலகத்தில் யாருமே அனாதையாகப் பிறப்பது இல்லை. அதே போல் அனாதையாகவே சாகறதும் இல்லை. ஆனால் இடைப்பட்ட வாழ்வில் தான் எத்தனை மாற்றங்கள்!
   யாரையும் உறவு முறை சொல்லி அழைக்கக் கூடாது என்று நினைத்தவளுக்கு இன்று திடிரென்று எத்தனை உறவுகள் முளைத்து விட்டன..?
   சேகரிடம் 'ரிஷன்ட் கடிதத்தை டாக்டர்கிட்ட குடுத்துடுறியா..?" என்று கெட்டதற்கு அவன் 'சரிங்க அண்ணி" என்று சிரித்து கொண்டே தலையாட்டியப் போது.. ஏதோ கேலிப்பண்ணுவது போல் இருந்தாலும் அது தானே உறவு என்பது! புரிந்து கொண்டதும் மனம் இன்பத்தில் மூழ்கியது. கண்கள் கலங்கச் சொன்னாள்.
   'சேகர்.. ஒங்கண்ணன் எனக்கு தாலி கட்டுனதுல இந்த ஒரு சந்தோஷம் தான் ரொம்ப திருப்தியா இருக்குது. ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம். ஒரே ஒருத்தர மட்டும் நா மொற சொல்லி கூப்ட மாட்டேன்;" என்றாள் மாமியாரை ஓரக்கண்களால் பார்த்தபடி.
   'நீ கூப்பிடலன்னா.. போயேன். எம்மவன் இன்னும் பத்து பொண்ணுங்கள கூட்டிக்கினு வருவான். அவளுங்க கூப்புட போறாளுங்க."
   'இன்னும் ஆயிரம் பேரவேணா கூட்டிக்கினு வரட்டும். ஆனா நாதான் அவரோட மனசுல இருக்கறவளாக்கும்."
   'தெரியுமில்ல. பின்ன ஏன்டி.. எதுவும் தெரியாதவ மாதிரி நடிச்ச..?"
   'ம்.. இலவு காத்த கிளியா ஆயிடகூடாதில்ல. அதுக்குத்தான்."
   'இப்பவும் நீ எலவு காத்த கிளி தான். இன்னும் ரெண்டு வருஷத்துக்குக் காத்துகெடக்க வேண்டியது தான்."
   அகிலாண்டேசுவரி சொன்னதின் அர்த்தம் அனைவருக்கும் புரிந்தது. மீனா தன் கணவனைப் பார்த்தாள். அவனும் அதே நேரம் அவளைப் பார்த்து கொண்டுதான் இருந்தான். மீனாவின் கன்னங்கள் செந்தூரமாகச் சிவந்தன.
   அதே நேரம் டெலிபோன் அழைக்க மீனா போய் எடுத்தாள். எதிர் முனையில் தேனப்பன்.
   'ஏய் மீனா.. இன்னிக்கி தப்பிச்சிட்டன்னு ரொம்ப கர்வபட்டுக்காத. எம்பையனுங்க ரெண்டு பேருமே என்ன நல்லா ஏமாத்திட்டணுங்க. ஆனா.. நா ஒன்ன சும்மா வுட மாட்டேன்டீ.." கோபத்தின் உச்சம் அவளையும் தாண்டி மற்றவர்களுக்கும் கேட்டது.
   'தோ.. பாருங்க. நா நேத்து ராத்திரி பூரா உங்க ஊருல தான் இருந்தேன். அப்பவே ஏதாவது செஞ்சிருக்க வேண்டியது தான..? சரி. இப்பவும் எதுவும் ஆயிடல. எங்க வரணும்ன்னு சொல்லுங்க? நானே வர்றேன். உங்க இஷ்டம் போல என்ன எது வேணுமின்னாலும் பண்ணிக்கங்க. ஆனா எந்தக் காரணத்த கொண்டும் என்னோட ஊர்க்காரங்க மேல கைய வக்கக்கூடாது. சொல்லுங்க எங்க வரணும்..?" கோபமாகக் கேட்டாள்.
   'ஏன்டீ.. என்ன என்ன கையாலாகாதவன்னு நெனச்சிட்டியா..? உன்ன என்னோட எதுருல வான்னு சொல்லி கூப்ட..? நானே வர்றேன்டீ.. வந்து வெட்றன். உன்ன எங்கையால சாவடிச்சாத்தான் என்னோட ஆத்தரம் அடங்கும். வர்றேன்டீ.."
   'வந்து அதையாவது சீக்கிரமா செஞ்சி தொல. நிம்மதியாவது சாவுறேன்."
   தொலைபேசியைக் கோபமாக அதனிடத்தில் வைத்தாள்.
   'சே.. எனக்குன்னு ஏன்தான் இப்படியெல்லாம் வருதோ..?" கோபத்துடன் முணுமுணுத்துக் கொண்டே போனவளை அங்கிருந்த அனைவரும் கவலையுடன் பார்த்தார்கள்!

                              (தொடரும்)

Monday, 4 February 2013

போகப் போகத் தெரியும் - 37





   கதவைத் தட்டும் ஓசை ஏதோ கனவில் ஒலிப்பது போல் இருக்க.. மீனா மெதுவாகக் கண்களைத் திறந்தாள். இரவு வெகுநேரம் வரையில் உறக்கம் வராமல் அமர்ந்தே இருந்ததால் உடல் அசதியில் கண் இமைகள் அவளையும் அறியாமல் மெதுவாக மூடிக் கொண்டன. மீண்டும் கதவைத் தட்டும் ஓசை!
   சட்டென்று எழுந்தாள். தான் எங்கிருக்கிறோம் என்பதை அறியச் சில வினாடிகள் பிடித்தன. ஜன்னலில் செந்நிற ஒளித்துகள்கள் விடியலை அறிவித்தன. மீனா எழுந்துவந்து கதவைத் திறந்தாள். நடுத்தர வயது பெண்மணி ஒருத்தி.. 'ஐயா.. உன்ன கௌம்பச் சொன்னார். கல்யாணத்துக்குப் போவணுமாம்." என்றாள்.
   அவள் காட்டிய வழியில் புறக்கடைக்குச் சென்று காலைக் கடன்களை முடித்துக் கொண்டு எதிரில் வந்தப் பெண்ணிடம் காபி கேட்டாள். அடுத்த இரண்டாவது நிமிடத்திலேயே காபி கொண்டு வர.. வாங்கிப் பருகிக் கொண்டே வீட்டை நோட்டமிட்டாள்.
   அது பெரிய பங்களாவைப் போல் அமைக்கப்பட்ட பழங்கால வீடு. அதன் ஓர் அறையில் தான் இரவு தங்கியிருந்தாள். ஆனால் நேற்று அவள் இதையெல்லாம் கவனிக்கவில்லை. அதற்கு நேரமும் இல்லை!
   வராண்டாவில் இருந்த பெரிய புகைப்படத்தில் தேனப்பன் இளஞராகத் தன் மனைவி கையில் குழந்தையுடன்! அநேகமாக அந்த குழந்தை வெற்றிவேலாக இருக்கும். அப்படத்திற்கு இருபுறமும் வெற்றிவேல் கண்மணியின் தனித்தனி புகைப்படம்!
   அதற்கு கீழ் இருந்த பழங்கால அரைஅலமாரியின் மேல் கண்மணியும் மீனாவும் சேர்ந்திருந்தப் புகைப்படம்! கல்லூரி நிகழ்ச்சியில் எடுத்திருக்க வேண்டும். மீனா தனக்குள் தானே சிரித்துக் கொண்டாள்.
   'என்ன மீனா..? ஒனக்கு நீயே சிரிச்சிக்கிற..?" கேட்டபடி வெற்றிவேல் அடுத்த அறையிலிருந்து வந்தான். வெள்ளை வேட்டிச் சட்டையில் பளீச்சென்று இருந்தான்.
   'இல்ல.. மனுஷனோட உருவத்துக்கும் கொணத்துக்கும் நடந்துகிற மொறைகளுக்கும்.. எவ்வளவு வித்தியாசங்கள வச்சி படைக்கப் பட்டிருக்காங்க பாருங்க! சிங்கத்த பாக்கும் போது அழகாயிருக்கு! ஆனா.. ஆபத்தானது. யானைய பாருங்க.. பாக்க பயமா இருக்கும்! ஆனா.. அது அமைதியானது. எதவச்சி ஒருத்தரோட குணாதிசயங்கள புரிஞ்சிக்கிறதுன்னு தெரியல வெற்றிவேல்." என்றாள்.
   அவன் அவளை உற்றுப் பார்த்தான்.
   'மீனா.. மனுஷனுங்க உருவத்தால எத்தனையோ மாற்றத்தோட இருக்கலாம். ஆனா எல்லாருக்குமே மனசுன்னு ஒன்னு இருக்குது. அதுல ஏதாவது ஒரு காயம் வேதனைய கொடுத்துக்கினு தான் இருக்குது. ஆனா மீனா.. நீ ஆறிப்போன காயத்துக்கு மருந்து போட நெனைக்காத. வேஸ்ட். வா போலாம். ஆத்தூர்காரங்க வந்துட்டாங்களாம்." என்றான்.
   அவள் யோசனையுடன் தலையாட்டினாள். அவன் சொன்னது ஏதோ புரிந்தது போலவும்.. அதே சமயம் புரியாதது போலவும் இருந்தது.
   கிளம்பியவன் நின்றான். 'மீனா.. ஒரு கண்டீஷன். கல்யாணம் முடியிறவரைக்கும் நீ எம்பக்கத்துல தான் இருக்கணும். சரியா..?"    அவள் 'சரி" என்பதற்கு அடையாளமாகத் தலையாட்டினாள். சிந்திக்கும் பொழுது வார்த்தைகள் மறைந்து செய்கைகள் மொழிகளாகி விடுகிறது.

   ஓடத்தூர் கோவில் மிகப் பழமையானதாக இருந்திருக்க வேண்டும். கருங்கள் துண்கள். கல்யாண மண்டபத் துண்களில்.. தேய்ந்து போன கற்சிலைகள். சிமென்ட் கற்களால் செப்பனிடப்பட்ட சில இடங்கள்! பட்டுப் புடவையில் கிழிச்சலை மறைக்க ஒட்டு வைத்துத் தைத்தது போல்..!!
   மணவறை பூச்சரங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. எதுவும் அவசர அவசரமாகச் செய்யப்பட்டது போல் இல்லை. ஊரே கோவிலில் கூடி இருந்தது. எல்லோரும் கூடிச் செய்தால் எதுவுமே சுலபம் தானே..!
   கோவிலுக்கு வெளியில் ஒரு சொகுசு தனியார் பேரூந்து நின்று கொண்டிருந்தது. ஆத்தூர்க்காரர்கள் அதில் வந்ததாக வெற்றிவேல் சொன்னான். தனதூர்க்காரர்களைக் கண்களால் தேடினாள். யாரும் கண்களில் படவில்லை. வெற்றிவேலிடம் கேட்கலாமா என்ற நாவை அடக்கினாள்.
   ஆனால் சற்று நேரத்திற்கெல்லாம் மேளதாளத்துடன் பெண்ணை அழைத்துக் கொண்டு கோவிலுக்குள் நுழைந்தார்கள். எல்லோருடைய பார்வையும் மீனாவின் மேல் பதிந்தது. மீனா முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் வெற்றிவேல் அருகில் நின்றிருந்தாள்.
   சக்திவேல் மீனாவின் அருகில் வந்தான். அவள் முகத்தை அருகில் பார்த்ததும் கண்கள் சுருங்கின.
   'என்ன மீனா நெத்தியில காயம்..? முகமெல்லாம் வீங்கி இருக்குது. யாராவது அடிச்சாங்களா..?"
   கோபமாக வெற்றிவேலை முறைத்துக் கொண்டே கேட்டான். அவன் மீது கோபத்துடன் இருந்தவள் அவன் குரலைக் கேட்டதும் சூரியனைக்கண்ட பனியாக உருகினாள். ஆனால் முகத்தையும் மனத்தையும் கடினப்பட்டு இறுக்கினாள்!
   'என்னை யாரும் அடிக்கல. நீங்க உங்க வேலைய பாருங்க." பற்களைக் கடித்துக் கொண்டு சொல்ல வெற்றிவேல் சிரித்துக் கொண்டான். ஏளனச் சிரிப்பு!!
   சக்திவேலுவின்; முகம் சிவந்தது. அதைக்கண்டும் காணாததைப் போல.. வெற்றிவேல் புடவை நகைகள் இருந்த தட்டை எடுத்துச் சக்திவேலிடம் நீட்டினான்.
   'தப்பூ ரெண்டு பேர்மேலயும் தான். என் தம்பி செஞ்ச தப்புக்கு பிராய்சித்தமா அந்த பொண்ண நாங்க ஏத்துக்கறோம். அதுக்காக உங்கக் கூட ஒட்டிஒறவாட நெனைக்கிறோம்ன்னு யாரும் நெனச்சிட வேணாம். உங்க பொண்ணு போட்டிருக்கிற பொடவ நகை எல்லாத்தையும் நீங்களே எடுத்துக்கினு இந்தப் பொடவை நகைகளப் போட்டு அனுப்புங்க. எங்களுக்குப் பொண்ண மட்டும் குடுத்தா போதும்." என்றான். அவனுடைய கர்வம் பேச்சில் தெரிந்தது.
   சக்திவேல் எதையும் பேசாமல் தட்டை வாங்கிக் கொண்டான். ஒரு காரியத்தின் முடிவு தான் வெற்றியைத் தரும். நடுவில் தோன்றிமறையும் பிரச்சனைகளை அலட்சியப் படுத்தினாலே போதும் என்பது அவனுக்குத் தெரியும்.
   சில இடங்களில் மனிதன் வெற்றி பெருவதைவிட மதிப்பு மிக்கவனாகக் காட்டிக் கொள்வதும் சிறந்த வழிதானே..!
   வெற்றிவேல் இன்னொறு தட்டை எடுத்து மீனாவிடம் நீட்டினான். 'மீனா இதெல்லாத்தையும் நீ போட்டுக்கோ." என்றான்.
   'எனக்கா..? எனக்கெதுக்கு..?" மீனா அதிர்ச்சியாகக் கேட்டாள்.
   'கல்யாணம் நடக்க போவுது. நீ இப்டி கழுத்து கை காதுல எதுவும் போடாம.. வெள்ளப் பொடவயோடவா இருப்ப?"
   'ஏன்..? இதுதானே என்னோட நிரந்தரம்." அவள் இப்படிச் சொல்ல.. எல்லோரும் அவளைப் பாவமாகப் பார்த்தார்கள்.
   'ஐமீன்.. நா ஒரு டாக்டரோட அசிஸ்டன்டட். எனக்கு இது தான் யூனிபார்ம். தவர.. வேலவிசயமாத்தான் நான் இந்த ஊருக்கே வந்தேன். எனக்கு இதெல்லாம் வேண்டாம் வெற்றிவேல்." என்றாள் சாதாரணமாக.
   'சரி. வெறும் பொட்டாவது வச்சிக்கோ." குங்குமச் சிமிழை எடுத்து நீட்டினான். மீனா வேதனையுடன் சக்திவேலுவைப் பார்த்தாள். அவனும் இவளைப் பார்த்துக் கொண்டு தான் நின்றிருந்தான்.
   'வேணாம் வெற்றிவேல். பொட்டு வைச்சிக்காதவங்க எல்லாம் விதவைன்னு நெனச்சிடாதீங்க." என்றாள்.
   வெற்றிவேல் ஒரு பெருமூச்சுடன் 'அப்புறம் உன்னிஷ்டம்" என்று சொல்லி விட்டுவிட்டான்.
   உன்விருப்பம் என்று சொல்லி முடித்துவிடுவது மற்றவர்களுக்கு விருப்பம் இல்லை இதில் என உணர்த்துவது தானே..!


   கெட்டி மேளம் முழங்க லட்சுமணன் ராதிகா கழுத்தில் மூன்று முடிச்சிப் போட்டான்.
   அட்சதையைக் கைநிறைய வாரிப் போட்டாலும் மீனா மனத்துக்குள் சிரித்துக் கொண்டாள்.
   திருமணம்.. சமுதாயம் திருப்தி அடைவதற்காக ஏற்படுத்தப்பட்ட சம்பிரதாய சேர்க்கை என்பது அவள் எண்ணம்! மனிதன் தன் துணைவரின் மீது வைக்காத நம்பிக்கையைக் கழுத்தில் கட்டியத் தாலியின் மீதோ.. விரலில் அணியும் மோதிரத்தின் மீதோ.. காகிதத்தில் போடும் கையெழுத்தின் மீதும் வைக்கிறான்!
   நம்பிக்கையற்ற கூட்டு முயற்சி தான் திருமணம்.
   ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற மனதளவில் வாழ முடியாதா..? அதற்கோர் அடையாளம் அவசியம் தானா..? கேட்ட மனத்தை அடக்கினாள்.
   எப்படிப் பட்ட நாத்தீக வாதிகளுக்கும் இதில் நம்பிக்கை இருக்கிறது என்பதை எண்ணும் பொழுது நாம் எம்மாத்திரம்?
   பெருமூச்சுடன் தன் கைவிரலைப் பார்த்தாள். மோதிரம் இல்லாத வெற்றுடலாய் விரல்கள்! சிரிப்பு வந்தது. ஆமாம். மனிதர்களுக்குத் திருமணம் என்ற அடையாளம் அவசியம் தான் என்ற மனத்துடன் நிமிர்ந்து சக்திவேலைப் பார்த்தாள். அவன் மட்டுமல்ல. வெற்றிவேலுவும் இவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
   மணப்பெண் ராதிகா ஒவ்வொருத்தர் கால்களிலும் விழுந்து எழுந்தாள். பூக்களைப் பார்த்து ஏங்கியவளின் தலையில் இன்று ஏகப்பட்ட பூக்கள்! ஆனால் முகம் வாடி இருந்தது!
   மீனாவின் எதிரில் வந்து நின்றவள் கை கூப்பிக் கும்பிட்டாள். கண்களில் கண்ணீர் வழிந்தது. அவள் மன்னிப்பு கேட்கிறாளா..? நன்றி சொல்கிறாளா..? புரிந்து கொள்ளமுடியாதப் பார்வை அவள் கண்களில் தெரிந்தது.
   மீனாவைவிட நான்கைந்து வயது அதிகமாக இருக்கும்! அதற்குள் எத்தனை வர்ணங்களைப் பூசிக்கொண்டாள்? கிணற்றடிக்குக் குடத்துடன் வருபவளின் கண்கள்.. மல்லிக் கொடியின் மீது பூத்திருக்கும் மல்லிகையின் மீதும்.. வீட்டோரம் நடப்பட்ட கனங்காமரத்தின் மீதும் நிலைத்து நின்று வேதனையுடன் வேடிக்கை பார்க்கும். விதவைகளின் ஏக்கம் பூக்களில் மட்டும் தானா..?  மற்ற விசயங்கள் ஊமை கண்ட கனவு போலத்தானே..
   படர இடம் இல்லாத முல்லைக் கொடிக்குப் பாரியாக லட்சுமணன் இன்று! முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியைவிட ஒரு விதவைக்கு வாழ்க்கை கொடுத்த லட்சுமணன் மீனாவின் மனத்தில் உயர்ந்து நின்றான்.
   'எனக்கு நன்றி சொல்ல வேணாம். ஒம்புருஷனுக்கு மொதல்ல நன்றி சொல்லு." என்று சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள்.
   சுகுணாவதி மணமக்களை அழைத்துக் கொண்டு கிளம்ப ஆத்தூர்க்காரர்கள் அனைவரும் பேரூந்தில் ஏறினார்கள். வெற்றிவேலுவின் அருகில் நின்றிருந்த மீனாவிடம் சக்திவேல் வந்தான். புன்னகையுடன் 'வா மீனா. போவலாம்" என்றழைத்தான்.
   'நா வரல. நீங்க கௌம்புங்க." மீனா பட்டும் படாமலும் சொன்னாள்.
   'இல்ல மீனா. நீ இப்போ எங்கூட வந்துதான் ஆகணும்." சொல்லிக் கொண்டே அவன் மீனாவின் கையைப் பிடிக்க.. உடனே வெற்றிவேல் தடுத்தான்.
   'அவ இங்கத்தான் இருப்பா.. நீ கௌம்பு." என்றான்.
   'அத சொல்ல நீ யாரு? மீனா வா. போலாம்" சக்திவேல் மீனாவின் கையை மீண்டும் பிடிக்க.. வெற்றிவேல் தடுத்து அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்தான். இவனும் அவன் சட்டையைப் பிடிக்க.. பேரூந்தில் இருந்தவர்கள் உடனே இறங்கி ஓடிவந்தார்கள். வெற்றிவேலுவின் ஆட்களும் தான்!
   மீனா சூழ்நிலை புரிந்து கோபத்துடன்  இருவர் நடுவிலலும் வந்து  நின்றாள்!
    'வெற்றிவேல் சக்திவேல் ரெண்டு பேரும் சட்டைய வுடுங்க. இப்போ எதுக்காக சண்ட? எனக்காகவா..? வேணாம் நா இங்க யார்கூடயும் இருக்கப் போறதில்ல. நா என்னோட வேலைய பாக்க கௌம்பிடுவேன். எனக்காக யாரும் சண்ட போட வேணாம்."
   இருவரும் சட்டையை விட்டார்கள். சக்திவேல் திரும்பி சேகரிடம் எதுவோ செல்ல.. வெற்றிவேல் மீனாவைப் பார்த்தான்.
   'மீனா.. புடிவாதம் புடிக்காத. நீ எங்கையும் போவக் கூடாது. போவவும் வுட மாட்டேன். நீ என்னோட தம்பி பொண்டாட்டி. அது மட்டுமில்ல. இனிமேல நீ எங்க போனாலும் உன்னோட உயிருக்கு ஆபத்து தான். நீ என்னோட பாதுகாப்புல இருக்கறது தான் நல்லது." என்றான் குரலைத் தன்மையாக்கி.
   எறிகிற அகல்விளக்கை மூடி போட்டுப் பாதுகாக்க முடியாது. இது காற்றுப் பலமாக அடித்தாலும் அணைந்துவிடும். காற்றே இல்லை என்றாலும் அணைந்துவிடும். மீனாவின் வாழ்க்கை எறிகின்ற அகல்விளக்கைப் போலத்தான் ஆகிவிட்டது.
   மீனா வெற்றிவேலுவை நிமிர்ந்து பார்த்தாள்.
   'வெற்றிவேல்.. உங்க மனசாட்சிய தொட்டு சொல்லுங்க. உங்க தம்பி செத்ததுக்கு நானா காரணம்?"
   அவன் பதில் சொல்லவில்லை. இவள் தொடர்ந்தாள்.
   'நான் அவரோட பொண்டாட்டின்னு சொன்னீங்க. சொல்லுங்க. நா அவர் கூட எத்தன நாள் வாழ்ந்தேன்? எதுக்காக எனக்கு தண்டனை தரணும்? நீங்க எதுக்காக என்ன காப்பாத்த நெனைக்கணும்? என்னால அப்பா புள்ளைக்குள்ள விரோதம் வளருணுமா..? நல்லா யோசிச்சி பாருங்க வெற்றிவேல்." என்றாள். அவன் பேசாமல் நின்றிருந்தான்.
   மனசாட்சி சில நேரங்களில் வீரனைக்கூட கோழையாக்கி விடுகிறது. ஆனால் நல்லவைகள் மட்டும் நடக்க நல்ல மனசு மட்டும் இருந்தால் போதுமே.. வீரம் அவசியம் இல்லை தானே..!
   திடிரென்று அவள் பக்கத்தில் யாரோ முணுமுணுப்பது போன்ற ஓசை வரவும் திரும்பிப் பார்த்தாள். ஆத்தூர் ஐயர் மந்திரத்தை ஓதிக் கொண்டிருந்தார். அவர் அருகில் சக்திவேல் கையில் தாலியுடன் கூடிய மஞ்சள் கயிற்றுடன்!
   புரியாமல் சக்திவேலைப் பார்த்தாள். அவன் வெற்றிவேலைப் பார்த்து சொன்னான். 'வெற்றிவேல்.. அன்னைக்கி இவ எனக்குத்தான் சொந்தம்ன்னு சொல்லி மோதரம் போட்டேன். ஆனா அதையும் மீறி ஒந்தம்பி இவ கழுத்துல தாலிய கட்டினான். இப்போ அவனும் இல்ல. அங்க நடந்தது கல்யாணமும் இல்ல. அதனால தோ இப்ப ஒம்முன்னாலேயே இவ கழுத்துல தாலி கட்டுறேன். உன்னால முடிஞ்சத பாத்துக்கோ."
   சொல்லிக் கொண்டே ஐயர் மந்திரம் ஓத.. மற்றவர்கள் அட்சதை தெளிக்க.. சக்திவேல் மீனாவின் கழுத்தில் தாலியைக் கட்டினான். ஏற்கனவே எல்லோரும் பேசி முடிவு எடுத்து நடந்து முடிந்த கல்யாணம்! இதை எதையும் அறியாத மீனா கோபத்துடனும் குழப்பத்துடனும் சிறகொடிந்த பறவையாக.. செய்வதறியாது நின்றுவிட்டாள்.
   வண்டை ஏமாற்றிப் பூவைப் பறித்தச் சந்தோஷம் சக்திவேல் முகத்தில்! ரோஜா தனக்காக இருக்கிறது. அதனால் அல்லியை உரிய இடத்தில் சேர்பித்துவிட்ட திருப்தி வெற்றிவேலுவின் முகத்தில்!
   எதிர்க்க வந்த ஆட்களை நிறுத்தியது அவனின் கட்டளைப் பார்வை. சக்திவேல் மீனாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் வண்டியில் ஏற்றினான். மீனாவும் ஏற பேரூந்து அனைவரையும் ஏற்றி கொண்டு கிளம்பியது. வெற்றிவேல் மனத்துக்குள் சிரித்து கொண்டான்.

           (தொடரும்)

Sunday, 3 February 2013

போகப் போகத் தெரியும் - 36





   கதிரவன் தன் கண்ணை மூடி அதிக நேரம் ஆகியிருக்காது. இருந்த வெளிச்சத்தில் ஒருவர் முகம் மற்றவர்களுக்குச் சரியாகத் தெரியவில்லை.
   பெட்டர்மாஸ் விளக்கொளியில் பஞ்சாயத்துக் கூடி இருந்தது. மீனா கைகளை முன் புறமாகக் கட்டி கொண்டு வெள்ளைப்புடவையில்.. நீதிதேவதை குற்றவாளிக் கூண்டில் நிற்பது போல் நின்றிருந்தாள்.
   அவளைச் சுற்றி வேலை செய்து ஓய்ந்து போன அழுக்கடைந்த மனிதர்கள்! சில பெரிய மனிதர்கள் வெள்ளை வேட்டிச் சட்டையில் பஞ்சாயத்து மேடையில் அமர்ந்திருந்தார்கள்.
   பஞ்சாயத்து கூடி இருந்த இந்தக் கொஞ்ச நேரத்திற் கெல்லாம் இவ்வளவு பேர் சேர்ந்துவிட்டது.. வம்பு எங்கே கிடைக்கும் எனநினைத்து அழுக்கு மனம் படைத்து இருப்பதாலா..?
   டாடா சுமோவில் வந்திறங்கினான் வெற்றிவேல். மீனாவை அந்த இடத்தில் பார்த்ததும் அவன் கண்கள் தாமாகவே அதிர்ச்சியில் விரிந்தன. ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
   'என்ன நடந்துச்சி..?" கோபமாகக் கேட்டான்.
   'இந்த பொண்ணும் இன்னொருத்தியும் வெளியூர்லர்ந்து வந்து நம்ம ஊருல அவுசாரம் பண்ணுதுங்க. இன்னிக்கி தோட்டத்து வூட்டுல கையுங்களவுமா மாட்டிகிட்டா. இன்னொறுத்தி தப்பிச்சி ஓடிட்டா."
   அவளைப் பிடித்து வந்தப் பெண்களில் ஒருத்தி நேரில் பார்த்தது போல் கத்திச் சொன்னாள்.
   'உண்மையா..?" மீனாவை வெற்றிவேல் கேட்க அவள் அவனைப் பார்வையாலேயே சுட்டுப் பொசுக்கிவிடுவது போல் பார்த்தாள்!
   'அவ எப்டி வாயத்தொறந்து சொல்லுவா..? இந்த விசயம் ரொம்பநாளா நம்மூர்ல நடக்குது." இன்னொருத்தியின் சாட்சி இது.
   மீனாவைப் பார்த்தான். கோபத்தில் கண்கள் சிவக்க நின்றிருந்தவள் எந்தப் பதிலையும் சொல்லவில்லை. 'தோ பாருமா. நீ வாயத்தொறந்து பேசாத வரைக்கும்.. உண்மைய ஒத்துக்கினேன்னு தான் அர்த்தம்" என்றான் வெற்றிவேல். குரலில் இலேசான அனுதாபம் தெரிந்தது.

  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²
 
   சக்திவேலின் கைபோன் பாடலுடன் அழைக்க எடுத்தான். மறுமுனையில் ஒரு பெண் குரல்.
   'சத்திவேலா..?"
   'ஆமா. சொல்லுங்க."
   'சத்திவேல்.. ஓன்வூர்க்கார பொண்ணு ஒருத்திய ஓடத்தூருல விபச்சாரம் பண்ணினதா குற்றஞ்சொல்லி பஞ்சாயத்தல நிக்க வச்சி கேள்வி கேக்கராங்க. உண்ம என்னன்னு தெரியல. வச்சிற்றேன்."
   இணைப்பு உடனே அறுந்தது. சக்திவேல் சற்று யோசித்தவன்.. கைபோனில் வெற்றிவேலின் எண்களை அழுத்தினான்.

   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²

   அலறியக் கைபோனை எடுத்து பார்த்து அதில் சக்திவேல் பெயரைப் பார்த்ததும் மீனாவை அலட்ச்சியமாகப் பார்த்தபடி பட்டனை அழுத்தி பேசத் துவங்கினான் வெற்றிவேல்.
   'ஏன்டா..? உங்க ஊருல ஆம்பளைங்களே இல்லியா..? ஒன்வூர்க்கார பொண்ணுங்க ரெண்டுபேர்.. இங்க வந்து அவுசாரம பண்ணி மாட்டிக்கிட்டாளுங்க. மாட்டிக்கிட்டவ ஒருத்தி. இன்னொருத்தி தப்பிச்சி ஓடிட்டா. மாட்டிகிட்டவ வாயத்தொறந்து பேசாமலேயே உண்மைய ஒத்துக்கிட்டா. அவகிட்டு பேசுறீயா..? இந்தா பேசு.." மீனாவிடம் போனை நீட்டினான்.
   அவளும் உடனே வாங்கிக் கொண்டாள். வெற்றிவேல் பேசினதிலிருந்தே அது சக்திவேலுவிடம் தான் என்பதைப் புரிந்து கொண்டு விட்டிருந்தாள்.
   'அலோ.." என்றாள். அவன் இந்த ஒரு வார்த்தையிலேயே கண்டுபிடித்து விட்டான்.
   'மீனாவா..? நீ எப்படி அங்க..? என்ன ஆச்சி?" குரலில் அதிர்ச்சி இருந்தாலும் காரியத்தில் கண்ணாகக் கேட்டான்.
   'சக்திவேல் சந்தர்ப்பம் சூழ்நில என்ன இங்க நிக்கவச்சிடுச்சி. ஆனா இதுக்கும் உங்க ஊருக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. நீங்க எந்த காரணம் கொண்டும் இங்க வரக்கூடாது." என்றாள் அழுத்தமாக.
   அவன் கோபத்துடன் யோசித்திருப்பான். கோபமூச்சுக் காற்றின் உஷ்ணம் தெரியாவிட்டாலும் சத்தம் கேட்டது. 'சரி நா ஒனக்காக வரல. இன்னொறு பொண்ணு யாரு..?" கேட்டான்.
   'சொல்ல மாட்டேன்."
   'அப்படியே இரு. எங்கூருக்கார பொண்ணுக்கு ஏதாவது அவமானம்ன்னு வந்துச்சி.. உன்னைய சும்மாவுட மாட்டேன்." என்றான் கோபமாக.
   'சரி" இணைப்பைத் துண்டித்துவிட்டு வெற்றிவேலிடம் போனை நீட்டினாள். அவன் கோபமாக முறைத்து கொண்டே வாங்கினான்.
   'ஏய் மீனா.. மரியாதையா உண்மைய சொல்லு. யாரு அந்த பொண்ணு? எதுக்காக தோட்டத்து வீட்டுக்கு வந்தீக..?"
   அவன் அவளை மீனா என்றதும் கூட்டத்தில் சலசலப்பு.
   'வெற்றிவேல்.. அந்த பொண்ணு யார்ன்னு நா சொன்னா.. அவளுக்குச் சரியான நியாயம் கெடைக்குமா..? நீ நியாயமா.. நடந்துக்குவியா..?"
   'தோ பாரும்மா.. மரியாதையா பேசு."
   வெற்றிவேலின் பெயரைச் சொன்னதற்காக ஒரு பெரியவர் கோபப்பட்டார். அவரைக் கண்களால் அடக்கிய வெற்றிவேல் மீனாவைப் பார்த்தான்.
   'நியாயமா நடந்துக்கிறேன். யார்ன்னு மொதல்ல சொல்லு." என்றான்.
   'ஓன்தம்பி லட்சுமணன கூப்பிடு. அவன் யார விரும்புறானோ.. அந்த பொண்ணு தான் அவ. அவ யாருன்னு அவனையே கேளு." கையைக் கட்டிக் கொண்டு அழுத்தமாகச் சொன்னாள்.
   சற்று நேரத்திற்கெல்லாம் லட்சுமணன் வந்து விட்டான். கேள்விகள் கேட்கப் பட்டன.
   'மீனா சொன்னது உண்மத்தான். நா அந்தப் பொண்ணத்தான் விரும்பறன். ஊர் பிரச்சனையில நாங்க சேரமுடியாம போயிடுச்சி. அவ புருஷன் செத்தபெறகு நாங்க தனியா சந்திக்கறது தான். ஆனா மீனா அங்க எப்போ எதுக்கு வந்துச்சின்னு தெரியாது." என்றான் தெளிவாக.
   'இப்போ என்னப்பண்ணப் போற வெற்றிவேல்? உன்னோட ஊரு. ஒன்னோட மனசுக்கு புடிச்ச பொண்ணு மட்டும் தான் ஒனக்கு முக்கியம். அதுக்காக எதுன்னாலும் செய்வ. ஆனா உன்னோட தம்பி. ஊருக்காக காதலிச்ச பொண்ண யாருக்கும் தெரியாம சந்திச்சிக்கினு தான் வாழ்ணுமா..? அவனுக்குன்னு மனசு இல்லயா..? ஒன்னோட சந்தோஷத்த மட்டும் பாக்காத. மத்தவங்களோட நியாயமான ஆசகளையும் நிறைவேத்தரவன் தான் உண்மையான தலைவனா இருக்க முடியும்." என்றாள் கோபமாக.
   'அப்டி நெனச்சிதான் உன்ன வேந்தனுக்கு கட்டிவச்சேன். உன்னால அவன கண்டிப்பா திருத்தமுடிம்ன்னு நெனச்சேன். முடிஞ்சிதா..?" குரலில் கவலையின் சாயல்! தனாடாவிட்டாலும் தன் சதையாடும் இல்லையா..?
   மீனா உடனே பதில் சொல்லவில்லை என்றாலும் சற்றுப் பொருத்துச் சொன்னாள். 'அவர நா கொஞ்சமும் விரும்பல." என்று.
   வெற்றிவேல் ஒரு பெருமூச்சுடன் யோசித்தான். அவனுக்குத் தெரியும் லட்சுமணன் எந்தப் பெண்ணை விரும்புகிறான் என்று. சக்திவேலுடன் தொடர்பு கொண்டான்.
   'சக்திவேல்.. உன்னோட ஊருல சதாசிவத்தோட பொண்ணு ராதிகாவ நாளைக்கி காலையில கூட்டிக்கினு வா. அவளுக்கும் எந்தம்பி லட்சுமணனுக்கும் மொதோ முகூர்த்தத்துல கல்யாணம்." என்றான்.
   அவன் கேள்வி எதுவும் கேட்காமல் 'சரி" என்றதும் போனை நிறுத்திவிட்டு மீனாவைப் பார்த்தான். மீனா 'தேங்ஸ் வெற்றிவேல்" என்றாள். தான் கொண்டு வந்தப் பையிலிருந்து பிளாஷ்டிக் பட்டைவாரை அட்டையுடன் எடுத்து வெற்றிவேலிடம் நீட்டினாள்.
   'இத டாக்டர் உங்க அப்பாகிட்ட குடுக்கச் சொன்னாரு. இதுக்காகத் தான் நா இந்த ஊருக்கு வந்தேன். அதுக்குள்ள இங்க இன்னான்னமோ நடந்து போச்சி. இத ஒங்க அப்பாகிட்ட குடுத்துடுங்க."
   பெட்டியை வெற்றிவேலிடம் நீட்டவும்.. தேனப்பனின் ஆட்கள் திபுதிபுவென ஓடிவரவும் சரியாக இருந்தது. அவர்கள் வந்த வேகத்தில் அவளைத் தாக்கியிருப்பார்கள். ஆனால் வெற்றிவேல் கையைக் காட்டி கண்களால் வேண்டாம் என்றுச் சொல்லவும் தயங்கி நின்றுவிட்டார்கள்!
   ஆனால் தேனப்பன்..?
   ஒரு கையால் கட்டையை ஊன்றிக் கொண்டு வந்தவன்.. மீனாவை ஓங்கி அறைந்தான். அவன் அறைந்த வேகத்தில் மீனா தடுமாறி கீழேவிழ.. நெற்றி எதிலோ பட்டு இரத்தம் கசிய ஆரம்பித்தது. வலி சுளீர் என்று வலித்தது.
   அதற்குள் தேனப்பனை நிறையப் பேர்கள் பிடித்துக் கொண்டார்கள். ஆனால் அவன் ஒரு கை ஒரு காலை வைத்துக் கொண்டே திமிறி மீனாவின் முடியைக் கொத்தாகப் பிடித்துத் தூக்கினான். 'ஒனக்கு எவ்ளோ கொழுப்பு இருந்தா.. நீ இந்த ஊருக்கு வந்திருப்ப. உன்ன சும்மாவுட மாட்டேன்டீ.."
   கத்திக் கொண்டே.. திரும்பவும் அவளை அறைய ஓங்கியவனின் கை நின்று விட்டது. அப்பொழுது தான் அவன் அவளின் முகத்தைப் பார்த்தான். அதிர்ச்சியில் முகம் கருகியது.
   'நீயா மீனா..? சீ.. ஒந்தயவுலயா நா இவ்ளோ நாளா இருந்தன்? சே என்ன பாபம் பண்ணினேனோ..? டேய் பசங்களா இவள கண்டந்துண்டமா வெட்டி போடுங்கடா.." தொண்டைக் கிழியக் கத்தினான்.
   அவர்கள் வெற்றிவேலுவின் முகத்தைப் பார்த்து கொண்டு தயங்கி நிற்க.. வெற்றிவேல் தேனப்பனின் எதிரில் வந்து நின்றான்!
   தந்தை என்ற மதிப்பை மனத்தில் வைத்திருந்தாலும்.. தன் தாய் இறந்த இரண்டாவது மாதத்திலேயே சுகுணாவதியை அவர் திருமணம் செய்து கொண்டதிலிருந்தே அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டவன்! ஒரே கிராமத்தில் வாழ்ந்தாலும் தனித்தனி வீட்டில் வசித்தவர்கள்!
   சிறுவயதிலிருந்தே கோபத்துடன் இருந்த மகன்.. தன் எதிரில்.. இராமனைக் கண்ட தசரதனாக.. தேனப்பன்!
   'நாளைக்காலையில லட்சுமணனுக்கும் ஆத்தூர் ராதிகாவுக்கும் கல்யாணம் வச்சிறுக்கேன். அது முடியட்டும். அப்புறமா இவள பாத்துக்கலாம். டேய் இவள புடிச்சி மரத்துல கட்டுங்கடா.." கட்டளையிட்டான்.
   மகனின் வார்த்தைக்குச் செவிமடுத்தான் தேனப்பன். இருந்தாலும் தன் மகனுக்கு ஆத்தூர் பொண்ணா..? மனம் ஒப்பாமல் லட்சுமணனை முறைத்தான். அவன் தலையைக் குனிந்து கொண்டான்.
   'அவன் விருப்பப்பட்ட பொண்ணு தான் அவ. கல்யாணம் ஆயிட்டா நம்மஊருல வந்து நம்ம ஊருக்காரியா இருக்கவேண்டியது தான..? நீங்க போங்க. நா பாத்துக்கறேன்." வெற்றிவேல் தணிவாகச் சொல்ல..
   'எப்டியாவது போங்க. அந்த ஊருல எல்லாருமே எனக்கு எதிரித்தான். ஒறவாட போறீயா..? போ. ஆனா நா அந்த மீனாவ சாவடிக்காம வுடமாட்டேன்." கத்திக் கொண்டே போய்விட்டான்.
   மழை பெய்ந்துவிட்டது போல் இருந்தது. 'வெற்றிவேல்.. நா எங்கையும் போவ மாட்டேன். என்ன எதுக்காக கட்டிபோடணும்? அவுத்துவுட சொல்லு."
   மீனா சொல்ல வெற்றிவேலைக் கேட்காமலேயே ஒருவன் அவளின் கட்டை அவிழ்த்து விட்டான். வெற்றிவேல் சிரித்துக் கொண்டான்.
   'லட்சுமணா.. இவள எங்கையாவது ஒரு ரூமுல தள்ளி அடச்சிவையீ.."
   வெற்றிவேல் உத்தரவிட லட்சுமணன் அவளைப் பார்க்க அவள் அவனுடன் சென்றாள்.
   ஒரு வீட்டில் நுழைந்து.. ஓர் அறையைத்திறந்து.. 'உள்ளே போ" என்றான் சத்தமாக. 'உள்ளப் போனதும் கதவ தாப்பா போட்டுக்கோ" என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் படி!
   மீனாவும் அதன் படி செய்து.. மனத்தில் இனம் புரியாத பயத்துடன் அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தாள்.     

                             (தொடரும்)