Sunday, 21 April 2013

போகப் போகத் தெரியும் - 48

   கோபம் நெருப்பைப் போன்றது. அது மற்றவர்களையும் அழித்துத் தானும் அழிந்து போகும் தன்மை வாய்தது. நெருப்பை நீர் கொண்டு அணைப்பதைப் போலக் கோபத்தை அன்பு கொண்டு அணைக்கலாம்.
   ஒருவன் அதிகமான கோபத்துடன் இருக்கிறான் என்றால்.. அவன் மனத்தில் ஆற்றமுடியாத துயரம் இருக்கிறது என்பது தான் உண்மை!
   தேனப்பன் மனத்தை மீனா நன்றாகப் புரிந்து கொண்டிருந்தாள். அவனுக்கு முதலில் ஆறுதல் தேவை. ஆறுதல் மனக்காயத்தின் மருந்து! அதைக் காயத்தின் மீது பூசிக் கொள்ளப் பொறுமை வேண்டும். அவனிடம் அந்தப் பொறுமை இல்லை.
   தனக்கு ஏற்பட்ட வலி எதிரிக்கும் ஏற்பட்டால் தான் தன்னுடைய வலி அடங்கும் என்று நினைத்தான். அதனால் தான் இந்தப் பகை உணர்ச்சி. ஆனால் இயலாமை!
   அவனுக்கு மீனாவின் மீதிருந்த கோபத்தில் இரண்டு கைகளும் கால்களும் சரியாக இருந்திருந்தால்.. அவன் எப்பொழுதோ அவளைச்  சாகடித்து இருப்பான்;. பாவம்.!
   மீனாவிற்கு அவனது உணர்ச்சிகள் புரிந்தது. அவனுடைய அறியாமையால் தான் இப்படி நடந்து கொள்கிறான் என்பதும் புரிந்து தான் இருந்தது. ஆனால் அவளுக்கே அவள் மீது வெறுப்பு!
   மற்றவர்களின் இன்பம் தனது இறப்பில் தான் இருக்கிறது. இதைக் காலையிலேயே முடிவெடுத்து விட்டதால் தான் தேனப்பன் ஆத்தூருக்குப் போவதற்கு முன் அவனைச் சந்தித்து விட வேண்டும். ஒன்று அவன் திருந்த வேண்டும். அல்லது தான் சாக வேண்டும். ஒரு முடிவுடன் தான் மாமியாரின் தூக்க மாத்திரை அட்டையைக் கையுடன் கொண்டு வந்திருந்தாள்.
   தன்னைத் தானே சாகடித்துக் கொள்வது தவறு என்று சட்டமும் தர்மமும் சொல்கிறது. ஆனால் இங்கே இருக்கும் அவசியத்திற்குச் சட்டம் தெரியாது. அதனால் தான் சட்டென்று உயிரை மாய்த்துக் கொள்ள அந்த மாத்திரைகளை வாயில் கொட்டினாள்.. !!
   ஆனால் விழுங்குவதற்குள் சட்டென்று வெற்றிவேல் அவள் கழுத்தில் கையை வைத்து அழுத்தி 'மீனா துப்பு. எல்லாத்தையும் துப்பு.." என்று கத்தினான்.
   மீனா அவன் கையை விலக்க முயன்று முடியாமல் எல்லா மாத்திரைகளையும் துப்பினாள். டீக்கடையில் தண்ணீர் வாங்கி வாய் கொப்பளிக்க வைத்தன். தேனப்பன் ஆத்திரத்துடன் தன் மகனைப் பார்த்து முறைத்தான்.
   அவனுடைய பார்வை 'நமக்குத்தான் அவளைச் சாகடிக்க மனம் வரவில்லை. அவளே தானே செத்துப் போறேன்னு சொன்னாள்;. விட்டுவிட வேண்டியது தானே" என்று சொன்னது.
   மீனாவிற்கு வெற்றிவேலின் மீது கோபம்! தொண்டையைச் செருமிக் கொண்டாள்;. 'எதுக்காக என்ன காப்பாத்துன வெற்றிவேல்? நா சாகணும். இனிமேலும் என்னால யாரையும் எழக்க முடியாது" கத்தினாள்.
   'மீனா நீ எதுக்குச் சாகணும்? சொல்லப் போனா நா தான் தண்டன அடஞ்சிருக்கணும்." திரும்பித் தன் தந்தையைப் பார்த்தான்.
   'அப்பா.. நான் தான் வேந்தன சாகடிசேன். நானும் அவன சாகடிக்கணும்ன்னு நெனைக்கல. என்னை காப்பாத்தினவளை கத்தியாலக் குத்திட்டானே.. என்ற ஆத்திரத்துல தான்; கையில் இருந்த குத்து விளக்காலக் குத்தினேன். அது அவனோட நடு முதுகுலக் குத்திடுச்சி. நானும் எதிர்பாக்கல. இது ஒங்கள தவர எல்லாருக்குமே தெரியும். சக்திவேலுவுக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்ல. அதே மாதிரி தான் லட்சுமணன் சாவும். அவுங்க மூனு பேரும் எதுக்கு சண்ட போட்டாங்க? ஏன் செத்தங்கன்னு தெரியல. ஆனா அதையும் மீனா மேலத்தான் பழியப் போட்டீங்க. உங்களுக்கும் அவுங்கக் குடும்பத்துக்கும் என்ன விரோதம்ன்னே தெரியல. தெரியாமலேயே விரோதத்த வளர்த்து விட்டிருக்கீங்க. இனிமே வர்ற தலைமுறையாவது நல்லா இருக்கட்டும்ன்னு நெனைக்கிறேன்;. ஏதாவது தண்டன தர்றதுன்னா எனக்கு தாங்க. தப்பு என்னோடது தான்!"
   நிதானமாகவும் தைரியமாகவும் சொன்னான். தேனப்பன் வாயடைத்தது போல் உட்கார்ந்து இருந்தான். எதிரி தான் எல்லாவற்றிர்க்கும் காரணம்.. என்று நினைத்த போது கொதித்தெழுந்த மனம்.. தன்னுடைய மகன் தான் காரணம் என்று தெரிந்த போது கவலையடைந்தது. எதிரியின் மேல் இருந்த கோபத்தை மகனின் மீது காட்ட மனம் வரவில்லை. ஏமாற்றமாக இருந்தது. ஏமாற்றியதும் எதிரிகள் இல்லை.
   தன்விரலாலேயே தன் கண்ணைக் குத்திக் கொண்ட வலி. அதற்காக விரலை வெட்டி எறிந்து விட முடியாது. தன்டனையும் கொடுக்க முடியாது. ஆனாலும் வேதனை இருக்கத்தான் செய்தது. யாரையும் எதுவுமே செய்ய முடியாத வேதனை. மன எரிச்சலுடன் தேனப்பன் ஒரு காலை ஊன்றி எழுந்தான். தன் மகனைத  தீர்க்கமாகப் பார்த்தான்.
   'உனக்கு எங்கையனோட பேர வச்சதால நா ஒரு நாள்கூட உன்னை பேர் சொல்லிக் கூட்டது கெடையாது. நானுன்னு இல்ல. என்னோட ஊர் காரங்க யாருமே உன்னை பேர் சொல்லிக் கூப்பிட மாட்டாங்க. அவ்ளோ மரியாதையா வாழ்ந்த மனுஷன சக்திவேலோட ஊர்க்காரன் எவனோ ஒருத்தன் சாகடிச்சான். அவரோட வழியில வந்தவன் நீ! அந்த ஊர் காரன் ஒவ்வொருத்தனையும் சாகடிப்பேன்னு நம்பிக்கையா இருந்தேன்; ஆனா நீ வேதம் ஓதுற. ஒனக்குச் சக்திவேல் கண்மணிய விட்டு கொடுத்திருக்கலன்னா.. அவன் மேல விரோதம் வந்திருக்கும். அவன் தந்தரக்காரன்;. தான் விரும்பனப் பொண்ணையே ஒனக்கு ஊருக்காக உட்டு குடுத்துட்டான். நீயும் பகைய மறந்துட்ட. மறந்ததுமில்லாம இப்ப ஒறவு கொண்டாடுறீயா..? வெக்கமாயில்ல ஒனக்கு..? தூ. " காறி உமிழ்ந்தான்.
   வெற்றிவேல் பேசாமலேயே நின்றிருந்தான். அவன் இதைவிட அதிகமாக எதிர் பார்த்திருப்பான் போலும்! கிடைத்த தண்டனை கொஞ்சம் தான். பரவாயில்லை. மனதுக்கு அமைதி கிடைக்க வேண்டும் என்றால் அதற்கும் முதலில் போராடத்தான் வேண்டி இருக்கிறது. கோபத்துடன் நின்றிருந்த தன் தந்தையைப் பார்த்தான்.
   'என்னை மன்னிச்சிடுங்கப்பா. தலைமுறை தலைமுறையா அடிச்சிக்கிட்டு சாவறத நா விரும்பல. இப்போ நாமா கொஞ்சம் பொறுமையா இருந்திட்டா நமக்குப் பின்னால வர்றவங்க நிம்மதியா இருப்பாங்க. என்னால காரணம் இல்லாத சண்டைக்கெல்லாம் உங்களுக்குத் தொணையா வர முடியாது. என்னோட ஆளுங்களும் உங்க கூட வர மாட்டாங்க." என்றான் முடிவாக.
   'யாரும் வரவேணாம். என்னோட உயிர் இருக்கிறவரைக்கும் ஆத்தூர் காரங்க எனக்கு எதிரித்தான். என்னோட ஒரு கையும் காலும் போனது சக்திவேலால தான். அவன் எனக்குப் பரம எதிரித்தான். நானே அவன பாத்துக்கிறேன். டேய்.. வண்டிய ஆத்தூருக்கு ஓட்டுங்கடா.. "
   அதிகாரமாகக் கத்தினார். யாரும் அவருக்கு உதவ முன் வாவில்லை. சுத்தி நின்றிருந்தவர்களைப் பார்த்தார். கூண்டுக்குள் அடைபட்ட சிங்கம் போல்..!
   'அவர அழைச்சிக்கினு போய் நம்மூருல உடுங்க.." வெற்றிவேல் சொல்ல நான்கு பேர் வண்டியில் ஏற வண்டி நகர்ந்தது. தேனப்பனின் பார்வை மகனைச் சுட்டுவிடுவது போல் இருந்தது.
   பூக்களைத் தின்னாதே என்று புழுவிற்குக் கட்டளை இட முடியாது. பாவம் புழு. அதற்குப் பூ இல்லையென்றால் எதை சாப்பிடும்? பூவைத் தின்னாமல் இருக்க ஒன்று நசுக்கி எறிந்துவிட வேண்டும். அல்லது அப்புறப் படுத்திவிட வேண்டும்.
   பாவம். புழுவின் நிலைதான் இப்பொழுது தேனப்பனுக்கு!
   தேனப்பன் போனதும் துளசியைப் பிடித்திருந்த ஆட்கள் அவரை விட.. நேராக மீனாவிடம் ஓடிவந்தார்.
   'வா மீனாம்மா.. நாம போவலாம்.. " மீனாவின் கையைப் பிடித்து இழுத்தார். மீனா இவ்வளவு நேரம் தந்தைக்கும் மகனுக்கும் நடந்த சம்பாசனைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவள் துளசியின் கையை உதறிவிட்டு வெற்றிவேலிடம் வந்தாள்.
  'தேங்ஸ் வெற்றிவேல்.." என்றாள்.
   'நான் தான் மீனா உனக்கு நன்றி சொல்லணும். ஒருத்தர தலைவரா ஏத்துகிட்டா அவர் செய்யச் சொல்லுற எல்லா விசயங்களையும் நாம ஏத்துக்கணும். நம்மோட மனசுக்குப் புடிக்குது புடிக்கல. அதெல்லாம் வேற விசயம். ஒரு வகையில செஞ்சோற்று கடன்னு சொல்லலாம். மகா பாரதத்துலக் கர்ணன் நல்லவன் தான். ஆனால் அவன் கூடி இருந்த இடம் அவனைக் கெட்டவன்னு தானே முத்திரை குத்துச்சி? நா என்ன கர்ணன்னு சொல்ல வரல. அதுக்காக துரியோதனனும் கெடையாது. தப்பு செய்யறது பாத்து அதுக்குத் தொணப்போவாம நகர்ந்து நின்னுடலாம்ன்னு நெனைக்கிறேன்.
   இது இன்னைக்கி நேத்து என் மனசுல வரல. ஊருக்காக கண்மணிய எனக்கு விட்டு குடுத்தானே சக்திவேல்.. அவனோட நல்ல கொணம் என்ன மாத்திடுச்சி. அன்னைக்கி ஊர்க்காரங்க எல்லாம் அவனத் திட்டுனாங்க. மொறப் பொண்ணு . நீ வுட்டு குடுக்காத. அவ ஒனக்கு தான் சொந்தம்ன்னு நல்லா உசுப்பி விட்டாங்க. ஆனா அவன் நிதானமா சொன்னான். 'என்னோட சந்தோஷத்துக்காக ஊருல கலவரம் வர்றத நா விரும்பல. கண்மணி என்ன கட்டிக்கிறத விட அவள விரும்புறவர கல்யாணம் பண்ணிக்கிட்டா.. ரொம்ப நல்லா இருப்பா..ன்னான் அவனுடைய அந்தப் பொருமை எனக்குப் புடிச்சது. ஏன் நானும் அப்படி இருக்கக் கூடாதுன்னு யோசிச்சேன். ஆனா.. அப்பாவுடைய வார்த்தைக்கும் கட்டுபடணும் என்ற கட்டாயத்துல இருந்தேன்.
   அதுவும் இன்னைக்கி போயிடுச்சி. உன்னோடத் துணிச்சலான செயல் என்னை பேச வச்சிது. இதுக்காக நாந்தான் ஒனக்கு நன்றி சொல்லணும்." என்றான்.
   மீனா பேசாமல் அவனைப் பார்த்தபடி நின்றிருந்தாள். தந்தை சொல்லைக் காப்பது செஞ்சோற்றுக் கடனா..? சற்றுக் குழப்பமானது தான். ஆனால் தந்தைக்கே மந்திரம் சொன்னதாகக் குமரக் கடவுளும் இருக்கிறார் தானே.. ஏதோ ஒரு வகையில் நல்லது நடந்தால் சரி. சிரித்து கொண்டாள்.
   'என்ன மீனா..? நீயே சிரிக்கிற? என்ன பாத்தா உனக்குச் சிரிப்பு வருதா..? நானே என்ன நெனச்சி பல நேரம் சிரிச்சிருக்கிறேன். மீனா.. எனக்கோரு உதவி செய்வியா..? "
   'என்ன வெற்றிவேல்..?"
   'என்னை.. நீ உன்னோட ப்ரெண்டா ஏத்துக்குவியா..? "
   மீனா கண்கள் விரிய அவனைப் பார்த்தாள். 'என்ன அப்படி கேட்டுட்டீங்க? உங்கள ப்ரெண்டா அடைய நா கொடுத்து வச்சிருக்கணும். ரொம்ப சந்தோஷமா இருக்குது வெற்றிவேல்." அவன் கையைப்பிடித்துக் குலுக்கினாள்.
  

  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²


   வெற்றிவேலின் வண்டியிலிருந்து மீனாவும் இறங்கியதை ஆத்தூர்க் காரர்கள் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள்! ஒவ்வொருவரின் கண்களிலும் கோப வெறி இருந்தது.  மீனா அவர்களை முறைத்தபடி வெற்றிவேலுவுடன் சக்திவேலுவின் அருகில் வந்தாள்!
   அவன் புரியாமல் அவளை யோசனையுடன் பார்த்தான். கோபமாக வெற்றிவேலுவை முறைத்தான்.
   'சக்திவேல்.. இவர் என்னோட புது ப்ரெண்டு. இனிமேல இவர் நம்ம எல்லாருக்கும் பிரண்டு தான்." என்றாள்.
   சக்திவேல் புரியாதவனாக வெற்றிவேலைப் பார்த்தான்.
   'ஆமா சக்திவேல்.. எனக்கும் சண்ட கொல ரத்தம் இதெல்லாம் புடிக்காமலேயே போயிடுச்சி. இன்னைக்கி மட்டும் நா மீனாவ பாத்து இருக்கலன்னா.. நானும் என்னோட அப்பாக்கூட சேந்து சண்ட போட வந்திருப்பேன். இந்நேரம் குத்து வெட்டு கொலன்னு நடந்திருக்கும். ஆனா இதெல்லாம்; யாருக்காக.? என்ன காரணம்? புரியாமலேயே நாம விரோதிகளா வளந்துட்டோம். இனிமேல இந்த விரோதம் வேணாம். விட்டுடலாம். இந்தா.. மீனாவோட மோதரம். இனிமேல உங்கிட்ட தான் இது இருக்கணும்."
   அவன் கையைப்பிடித்துக் கொடுத்தான். 'மீனா.. நா கௌம்புறேம்மா.." கிளம்பினான்.
   'வெற்றிவேல்.. எப்போ என்ன பாக்க வருவீங்க..?" அவன் சிரித்தான். 'ஏ அசடு. இந்த மாதிரியெல்லாம் பேசக்கூடாது."
   'ஏன் பேசக்கூடாது. நீங்க என்னோட ப்ரெண்டு. யாரும் எதுவும் நெனைக்க மாட்டாங்க. அப்புறம் நீங்க திருவிழாவுக்கு வரணும். கண்மணியையும் கூப்பிடுங்க. அன்னைக்கி மாதிரி காளைய அடக்கணும். உங்க வீரத்தபாத்து கண்மணி மயங்கணும். அதை நா பாத்து ரசிக்கணும். என்ன சரியா..?"
   'சரி. வர்றேன். ஆனா நீ அன்னைக்கி மாதிரி என் கூடத்தான் இருக்கணும். சரியா..?" என்றான்.
   இவன் 'சரி" யென்று தலையாட்டக் கிளம்பிப் போனான். ஊர் ஒன்றும் புரியாமல் இவர்களை வேடிக்கை பார்த்தது.

                         (தொடரும்)

1 comment :

  1. அருமையாய் தொடர்கின்றீர்கள்.

    ReplyDelete