Wednesday 29 May 2013

போகப் போகத் தெரியும் – 56





   டிரிங்..  டிரிங்..
   தொலைபேசி சத்தமிட்டுக் கூப்பிட்டது. இரண்டு மனிதர்கள் முகங்களைப் பார்க்காமலேயே பேசிக் கொள்ள ஏற்படுத்தப் பட்ட சாதனம். வார்த்தைகளின் பரிசனம்!
   கணவனின் அரவணைப்பில் கிடந்த மீனா.. மெதுவாக விலகி எழுந்தாள். கருநீல வானம் சாயம் போகத் துவங்கியிருந்தது. விடிந்து விட்டதா..? தூங்கியது போலவே இல்லை. அதற்குள் விடிந்துவிட்டதா..?
   தொலைபேசி கூப்பிட்டு கொண்டே இருந்தது. அவசரமாக எழுந்து.. கீழே கிடந்த புடவை ஜாக்கெட்டை அணிய நேரம் இல்லாமல் அருகில் கிடந்த தன் கணவனின் சட்டையை உள்பாவாடைக்கு மேல் அணிந்து கொண்டு.. கூடத்தில் கத்திய தொலைபேசியை எடுத்தாள்.
   எதிர் முனையில் கண்மணியின் அப்பா!
   'மீனாவாம்மா.. நல்லாயிருக்கியா..?"
   'ம்.. இருக்கேங்க. என்ன விசயம் இவ்வளவு காலையிலேயே..?"
   'நம்ம கண்மணிக்கு இப்பத்தான் கொழந்த பொறந்துச்சி. ஆம்பள கொழந்த. தாயும் கொழந்தையும் நல்லா இருக்காங்கம்மா.. வீட்டுல சொல்லிடு." என்றவர் வைத்துவிட்டார்.
   மீனாவிற்கு உடம்பெல்லாம் சிலீர்த்தது. எதற்காகத் தன் கணவனை விட்டுப் பிரிந்தாளோ.. அதற்கான பலன் கிடைத்து விட்டது. அவள் பிரிந்து போயிருக்கவில்லை என்றால்.. இப்படியான மகிழ்ச்சியான நிகழ்ச்சியே நடந்திருக்காது.
   நேற்று இரவு அவள் கணவன் அவளிடம் நடந்து கொண்ட விதம்.. ஏதோ நேற்று தான் முதலிரவு போல.. எவ்வளவு ஆசையுடன்.. கொஞ்சளுடன்.. நினைக்கவே மனத்துடன் முகமும் சிவந்தது.
   அவள் மேல் இவ்வளவு ஆசையும் அன்பும் வைத்திருப்பவனால்.. நிச்சயமாகத் தான் இங்கே இருந்திருந்தால்.. கண்மணியையோ.. அல்லது வேறு ஒரு பெண்ணையோ.. கல்யாணம் செய்து கொண்டிருக்க மாட்டான்.
   இந்த உலகமே தான் செய்தது தவறு என்று சொன்னாலும்.. அவள் மனத்திற்கு அவள் செய்தது மிகச் சரியானதே..! சின்ன மீன் உயிரை விட்டால் தான் பெரிய மீன் தூண்டிலில் அகப்படும் தத்துவம் தான் இது!
   கணவனை எழுப்பினாள். இரவெல்லாம் இன்பக் கடலில் மூழ்கி நீந்தியவன்.. கண்கள் சிவக்க மீனாவைப் பார்த்து 'என்னம்மா" என்றான்.
   மீனா அவனருகில் அமர்ந்தாள். 'என்னங்க.. உங்களுக்கு காலையிலேயே ஒரு சந்தோஷமான விசயம் சொல்லப் போறேன்."
   குப்புறப் படுத்திருந்தவன் திரும்பிப் படுத்தான்.
   'நீ எம்பக்கத்துல இருக்கறது தான் எனக்கு மிகப் பெரிய சந்தோஷம். அதவிட வேற எதுவுமே எனக்குப் பெருசா சந்தோஷத்த தராது." அவள் இடையில் கையை நுழைத்து தன் பக்கமாகச் சாய்த்தான். மீனா அவன் கையை இலேசாக விலக்கினாள்.
   'கண்மணிக்குக் கோழந்தப் பொறந்திடுச்சாம்.." முகம் மலர சொன்னாள்.
   அவன் 'ஓ.. அப்படியா..?" என்ற படி திரும்பிப் படுத்தான். அவன் சொன்ன  ;ஓ.. அப்படியா ; வில் அவள் எதிர் பார்த்த எந்த சுரத்தையும் அதில் இல்லை.
   'என்ன குழந்தையாம்..?" அக்கரையில்லாத ஒரு கேள்வி! ஏதோ கேட்க வேண்டுமே என்பதற்காகக் கேட்கப் பட்டது போல் இருந்தது.
   'ஆம்பளப் புள்ளன்னு சொன்னாரு."
   'ஓஷோ.." அவன் திரும்பிப் படுத்து தூங்கினான்.
   மீனா அவன் செய்கையை அதிசயமாகப் பார்த்தாள். என்ன..? ஏன் இப்படி..? எதுவும் புரியவில்லை. யோசனையுடன் துணிகளை எடுத்துக் கொண்டு குளியளறைக்குள் நுழைந்தாள்.
   சரியான காரணம் தெரியவில்லை என்றால் குழப்பமாகத் தான் இருக்கும். காரணத்தை அறிவதற்காகச் சொல்லப்பட்ட வார்த்தைத் தானே குழப்பம் என்பது? அவள் குழப்பத்துடனே குளித்து முடித்தாள்.
   அவனிடம் இது குறித்துப் பேசிவிட வேண்டும். கண்மணியைப் பற்றி பேசினால் வேறு கோபப்படுகிறான். வேறு என்னவென்று பேசுவது..? ஆனால் எப்படியாவது பேசிவிட வேண்டும்.
   முடிவுடன் தனதறைக்குள் நுழைந்தாள். ஆனால் அவன் அங்கு இல்லை!
   தொலைபேசி அழைத்தது. போய் எடுத்தாள். எதிர் முனையில் 'ஐயேம் ஆனந்தி. சக்திவேல் இருக்காரா..?" வீணையின் ராகம் குரலில்!
   'அவர் இல்லைங்க வெளிய போய் இருக்காரு. என்ன விசயம்..?"
   'நீங்க யாரு..?"
   'நா.. மீனா.." அவர் மனைவி என்று வாய் வரை வந்ததைச் சொல்லவில்லை.
   'ஓ.. மீனாவா..? சக்திவேல் வந்ததும் டெலிபோன் பண்ணச் சொல்லுங்க. சியூ.." இணைப்பைத் துண்டித்து விட்டாள்.
   ;யார் இந்த ஆனந்தி..?  சரி. யாராக இருந்தால் நமக்கென்ன..? வந்தால் சொல்லிவிட வேண்டும். ; மனத்தில் பதிய வைத்துக் கொண்டு கையிலிருந்த புத்தகத்தில் மனத்தைச் செலுத்தினாள்.
   கண்கள் புத்தகத்தில் இருந்தாலும் சக்திவேல் கண்மணி குழந்தை என்று மாறிமாறிக் கண்முன் காட்சியாக வந்தது. சக்திவேலுவின் அலட்சியம் குழப்பத்தைத் தந்தது.
   அதிகக் குழப்பம் இருந்தால் முக்கியமானது மறந்து போய் விடும். மற்றக் குழப்பத்தில் இதை மறந்துவிட்டாள்.

   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²

   சக்திவேல் கொடுத்த ஊதாநிறக் காகிதத்தைத் திறந்து பார்த்தாள் மீனா. அதனுள் தங்கச் சங்கிலி சுருட்டி வைக்கப் பட்டிருந்தது. பெரிய ரோஜாவுக்குள் இருக்கும் மகரந்தம் போல் இருந்ததைக் கையில் எடுத்து பார்த்தாள். குழந்தைச் சங்கிலி! சின்ன தாம்பு கயிற்றைப் போல் இருந்தது.
   'புடிக்குதா..?"
   'ரொம்ப அழகாயிருக்குதுங்க."
   'சரி. சீக்கிரமா கௌம்பு. போய்ப் பாத்துட்டு இருட்டறதுக் குள்ள வந்துடலாம்." அவளுடைய சந்தோசத்தை ரசித்துக் கொண்டே சொன்னான்.
   'நா வரலைங்க. நீங்க போய்ப் பாத்துட்டு வாங்க." இதைச் சொல்லும் பொழுது முகம் சுருங்கியது.
   'ஏன்.. வந்ததுலேர்ந்து கண்மணி.. கண்மணின்னு இருந்த..? இப்ப என்ன ஆச்சி..?"
   'ஆமாங்க. கண்மணிய பாக்கனும்ன்னு தான் நா முக்கியமா வந்தேன். ஆனா இந்த நேரத்துல வேணாம்ன்னு நெனைக்கிறேன்."
   'ஏன்..? அவளுக்குக் கொழந்த பொறந்ததுல ஒனக்குச் சந்தோஷம் இல்லாத மாதிரி பேசுற?"
   'சேச்சே.. அப்படியெல்லாம் இல்ல. அவ நல்லா இருக்கணும். கொழந்த நல்லா இருக்கணும். நா அதிஷ்டமில்லாதவ. அந்தக் கொழந்தையத் தொடக் கூட எனக்குப் பயமா இருக்கும். நா பாக்கப் போயி அதுக்குச் சின்னதா ஏதாவது ஆனாக்கூட என்னால தாங்க முடியாது. அதனால தான் சொல்லுறேன். என்னைப் புரிஞ்சிக் கோங்க. ப்ளீஸ்.." என்றாள் கண்கலங்க.
   'மீனா.. நீ இந்த ஊருல இருக்கிறவங்களுக்கு ஒரு தேவதை மாதிரி. அதுவும் அதிஷ்ட தேவதை! உன்னப் போயி யாராவது அப்படி நெனைப்பாங்களா..? நீயே உன்ன தாழ்த்திக்காத."
   'தேவதை இல்லைங்க. எதுக்கும் ஒதவாத உயிருள்ள ஒரு பிணம். உணர்ச்சிகள் இருந்தாலும் அதற்கான அர்த்தத்தைத் தர முடியாத ஜடம். மலடின்னு என்னை யாரும் சொல்லல. ஆனால் என்னோட மனசுல கல்வெட்டா பதிஞ்சிடுச்சி. வேண்டாம். என்னை விட்டுடுங்க. என்னோட மனச சீண்டிப் பாத்தா நா செத்துடுவேன் சக்திவேல்.." அவன் மார்பில் முகம் புதைத்து அழுதாள்!
   அவன் அவள் தலையைத் தடவிக் கொடுத்தான். அவள் முகத்தைத் தூக்கிக் கண்ணீரைச் சுண்டிவிட்டு நெற்றியில் முத்தமிட்டான்.
   'மீனா.. உன்னோட மனசுல இருக்கிற காயம் இன்னும் ஆறல. ஆனா.. அதுக்கான மருந்து எங்கிட்ட இருக்குது. கூடியச் சீக்கரம் உனக்குத் தர்றேன். அது வரைக்கும் பொறுமையா இரு."
   அவள் கன்னத்தைத் தட்டிவிட்டுச் சென்றான்.

(தொடரும்)

No comments :

Post a Comment