Tuesday 12 June 2012

போகப் போகத் தெரியும் - 13


   வள் ஓடின வேகத்தைப் பார்த்த மீனாவிற்கு ஆச்சர்யம்! இவ்வளவு ஆசையுடன் இருப்பவளைச் சக்திவேலால் புரிந்து கொள்ள முடியவில்லையா......? எழுந்து மண்ணைத் தட்டிவிட்டு நடந்தாள்;;. அவளுக்கும் சந்தோசம். தானும் முதல்முறையாக சக்திவேலுவை நேராகப் பார்க்கப் போகிறேமே என்ற எண்ணம்!
   கற்பனையில் எண்ணங்களை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் சிறகடித்துப் பறக்கச்செய்யலாம்...... ஆனால் நடைமுறையில் நடப்பது எதுவும் கற்பனையில் பறந்த பறவையாக இருப்பதில்லையே......!!


   கண்மணியின் வீட்டு வாசலில் இரண்டு டாடா சுமோ நின்று கொண்டிருந்தது. அதன் ஒன்றின் மீது ஒருவர் சாய்ந்து நின்று கொண்டிருந்தார். ஆறடிக்குக் குறையாத உயரம். வயது முப்பதுக்குள் இருக்கும். வெள்ளைவேட்டி வெள்ளை சட்டை. சற்று சதைப்பிடிப்பான தேகம் அவரை மேலும் கம்பீரமாகக் காட்டியது. கழுத்தில்  கையில்  கைவிரல்களில் தங்கம் பெரிது பெரியதாக மின்னியது. அவர் அருகில் ஆறு வெள்ளை வேட்டி ஆண்கள்!!
   அவனை மறைவாக நின்று கொண்டு பார்த்து கொண்டிருந்த மீனாவிற்கு அவனின் தூக்கி முறுக்கிவிட்ட மீசையும் இலேசாக சிவந்திருந்த சிறிய கண்களும் சற்று அச்சத்தை மூட்டியது. அதிலும் இந்த வண்டிகள்.... இந்த ஆட்கள்..... யாரையும் அவள் இதுவரையில்; பார்த்ததில்லை.
   வந்தவர்களுக்கு இளநீர் வெட்ட ஓடின வேலையாலை நிறுத்தி 'இவர் யார்.....?" என்று கெட்டாள் சந்தேகமாக.
   'இவர் தான்மா... நம்ம கண்மணி பாப்பாவ கட்டிக்கபோற வேலுத்தம்பி......." அவசரமாக சொல்லிவிட்டு ஓடினார்.
   அப்படின்னா இவர் தான் சக்திவேல்! கணேசன் சொன்ன அத்தனை லட்சணமும் இவரிடம் இருக்கிறது.
   கண்மணியிடம் சற்று நேரத்திற்கு முன் பேசியது ஞாபகத்திற்கு வந்தது. என்ன செய்யலாம்......? சுவர் ஓரத்தில் அலங்காரத்திற்காக வளர்க்கப்பட்ட ரோஜா செடியில் நிறைய இரத்தநிறப் பூக்கள்! அதிலிருந்து ஓர் அழகான பூவைப் பறித்தாள்.
   அதைக் கொண்டு போய் அவனெதிரில் நீட்டிப் புன்னகைத்தாள். உலகத்திற்கே வெளிச்சம் தந்து கொண்டிருக்கும் சூரியனிடமிருந்து குளிர்ச்சியாக இறங்கிவந்த தேவதையைப் போல் அவன் கண்களில் விழுந்தாள். அவன் அதிசயமாகப் பார்த்தான்! அதிலும் தலைமுதல் கால்வரைப் பார்த்தான். தேவதையை நேரில் பார்த்த வியப்புக் கண்களில்!
   'என்ன அப்படி பாக்குறீங்க? என்னைத் தெரியலையா....? நான் தான் மீனா. உங்க கண்மணியோட தோழி! கண்மணி தான் இந்தப் பூவை உங்கக்கிட்ட குடுக்கச் சொன்னாள். இந்தாங்க."
   பூவைச் சிரித்துக் கொண்டே நீட்டினாள். அவன் சற்று யோசித்தவன் பூவை வாங்குவதைப் போல் வந்து சட்டென்று அவள் கையைப் பிடித்தான்.
   'பூவை மட்டுமா....? இல்ல... பூவைக் கொண்டு வந்த பூவையையுமா....?"
   மீனா இதைச் சற்றும் எதிர்பார்க்க வில்லை. கையைச் சிரித்து கொண்டே விடுவிக்க முயற்சித்தாள். முடியவில்லை. இந்தக் காட்சியை ஜன்னல் வழியாக கவனித்த ஒரு ஜோடிக் கண்கள் கோபத்தால் சிவந்தன.
   'ஐயோ கையை விடுங்க..... கண்மணி மேல நீங்க வச்சிருக்கிற அன்பு இவ்வளவு தானா....? "
   அவள் இப்படி கேட்டதும் அவள் கையைவிட்டு விட்டுப் பூவைவாங்கி அழுத்தி முகர்ந்தான். கண்கள் மீனாவையே அழுத்தமாகப் பார்த்துக் கொண்டிருந்தன.
   அதற்குள் வெளியே போயிருந்த கண்மணியின் அப்பா சண்முகம் அவசர அவசரமாக வந்தார்.
   'வாங்க மாப்புள.... வாங்க.... ஏன் வெளியேவே நின்னுட்டீங்க....? உள்ளே போவவேண்டியது தானே...."
   அவர் அப்படி கேட்டதும் அங்கே நின்றிருந்த மோட்டார் வண்டியைக் கோபத்துடன் இவன் கண்களால் காட்டினான். மீனாவும் பார்த்தாள். இந்த வண்டி சின்னதம்பியுடையது அல்லவா....? மனத்தில் இலேசான மகிழ்ச்சி வந்து ஒட்டிக்கொண்டது.
   'ஓ..... தம்பியும் வந்திருக்குதா....? இருந்தா என்னப்பா....? நீங்களும் உள்ள வாங்க. எனக்கு ரெண்டுபேருமே வேண்டியவங்க தானே..... உள்ளாற வாப்பா...." சொல்லிக் கொண்டே அவர் உள்ளே ஓடினார்.
   அவன் பேசாமல் அலட்சியமாக நின்றிருந்தான். மீனா தான் அவன் கையைக் பிடித்து இழுத்து அழைத்தாள்.
   'என்ன நீங்க? இந்த விட்டு மாப்பிள்ளை! நீங்க உள்ளே வராம வெளியே நிற்பதா.....? வாங்க உள்ள....."
   அவளிழுக்க அவன் வந்தான். உள்ளே சண்முகத்திடம் பேசிக் கொண்டிருந்த சின்னதம்பி மீனாவையையும் அவள் பிடித்திருந்தக் கையையும் பார்த்து முறைத்தான். அந்த முறைப்பில் தெரிந்த கோபம் அவளை அவள் பிடித்திருந்த கையை விட்டுவிட வைத்தது.
   ஒரு சிலரின் பார்வையே கட்டளையிடும்!
   மீனா கண்மணியின் அருகில் வந்து நின்று கொண்டாள். சின்னதம்பி பரிசு பொருளை நீட்டி 'பிறந்த நாள் வாழ்த்துக்கள் கண்மணி " என்றான். அவள் நன்றி சொல்லிவிட்டு வாங்கிக் கொண்டாள்.
   வேலுவும் ஒரு பரிசை நீட்டினான்.
   'ஒனக்காகவே செய்யச்சொல்லி வாங்கிக்கினு வந்தேன் கண்மணி." என்றான். இலேசான புன்முறுவளுடன் வாங்கிக் கொண்டாள்.
   'கண்மணி உள்ள போயி சாப்புட ஏதாவது கொண்டாம்மா....." சண்முகம் சொல்லக் கண்மணி மீனாவின் கையைப் பிடித்து இழுத்து கொண்டு நடந்தாள்.
   அவர்கள் போனதும் வேலு கேட்டான்.
   'இங்க ஏதுக்கு வரணும். அடுத்தவனுக்கு நிச்சயமான பொண்ணு கண்மணின்னு தெரியாதா.....?" குரல் கரகரப்பாகவும் கோபமாகவும் வந்தது.
   அவன் இவனிடம் பதில் சொல்லவில்லை. 'மாமா.... நா மீனாவ கூட்டிக்கினுப் போவத்தான் வந்தேன்.... அத்தை மீனாவைச் சீக்கிரம் கௌம்பி வரச் சொல்லுங்க." எனறான் கண்மணியின் தாயிடம்.
   'என்ன மீனா ஒங்களுக்குத் தெரிஞ்ச பொண்ணா....? அவ எங்கிட்ட சொல்லவேயில்லப்பா....."
   அவன் எதுவும் பேசாமல் இருக்க சரஸ்வதி மீனாவைக் கூப்பிட உள்ளே சென்றாள்.
   'ஓ..... இந்த அல்லியைப் பாத்துத்தான் அந்த ரோஜாவ வேணான்னு சொன்னியா....? நான் ஏதோ நீ இந்த ஊர் நல்லதுக்காகத் தான் விட்டுக் கொடுத்துட்டியோன்னு நெனச்சேன்."
   சொல்லிக் கொண்டே கையில் இருந்த ரோஜாவை அழுத்தமாக முகர்ந்தான். சின்னதம்பியின் கண்கள் இதைக்கண்டு மேலும் சிவந்தன.
   'ஊருக்காக காதலிக்கிற பொண்ணை விட்டுக் கொடுக்க நான் ஒன்னும் கோழையில்லை." சூடாக வந்தது பதில்.
   'அப்படின்னா....?"
   'கண்மணியை நான் காதலிக்கலைன்னு அர்த்தம்" அழுத்தமாகச் சொல்லிவிட்டுச் சண்முகத்திடம் திரும்பினான். 'மாமா இன்னைக்கி ஊருல திருவிழா தொடங்குது. இந்த வருஷம் தேர் ஊர்வலம் இருக்குது. நீங்க எல்லாரும் வந்து விழாவுல அவசியம் கலந்துக்கணும். நேரடியா வந்து அழைக்கத்தான் வந்தேன் மாமா. அவசியம் வந்திடுங்க." என்றான்.
   'சரிப்பா....." என்றார் அவர்.
   'மாமா.... நீங்க வேணும்ன்னா அங்க போயிக்கோங்க. ஆனா கண்மணிய அழைச்சிக்கினு போவக்கூடாது. நான் ஒன்னும் மத்தவங்கள மாதிரி என்னுடையவளை ஊர்ஊரா சுத்த அனுப்புறவன் கெடையாது." என்றான் வேலு.
   சின்னதம்பி பற்களைக் கடித்தான். அவனுக்கு மீனாவின் மீது கோபம் வந்தது. ஆனால் அவளைக கேள்வி கேட்கத் தனக்கு எந்த உரிமையும் இல்லை என்று நினைக்கும் பொழுது மனது வேதனையால் வெந்தது. அவனால் வேலுவைப் பார்த்துக் கோபமாக முறைக்க மட்டுமே முடிந்தது.
   வேலு அவன் பார்வையை இலட்சியப் படுத்தவில்லை. கையில் இருந்த ரோஜாவை இன்னும் அழுத்தமாக முகர்ந்து கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். அவன் போனதும் மீனா அவசர அவசரமாக வந்தாள்.
   'இதோ பாருங்க....... நான் இப்போ உங்கக் கூட வர முடியாது. எனக்கு இங்க ஒரு வேலையிருக்குது. அது முடிஞ்சதும் நாளைக்கி நானே வந்துடறேன்." கோபமாகச் சின்னதம்பியைப் பார்த்து சொன்னாள்.
   'எந்த வேலையின்னாலும் பரவாயில்லை. நீ இப்பவே என்கூட வந்தாகணும். கௌம்பி வா. வெளிய காத்துக்கினு இருக்கேன்."
   அவன் சொல்லிவிட்டு இல்லையில்லை. கட்டளையிட்டுவிட்டு அவள் பதிலுக்குக் கூடக் காத்திருக்காமல் போய்விட்டான். அதற்குள் கண்மணி அவளின் தோள்பையைக் கொண்டு வந்து நீட்ட அவளைக் கவலையுடன் பார்த்துக் கொண்டே பையை வாங்கிக் கொண்டு கிளம்பினாள்.
   வெளியே வந்த சின்னதம்பி வேலுவைத் தாண்டிப் போகும் பொழுது 'அல்லி கொடுத்த ரோஜா அபாரமான வாசனையாத்தான் இருக்குது." என்று சொல்லிக் கொண்டே ரோஜாவை வேலு அழுத்தமாக முகரவும் சின்னதம்பி அவனெதிரில் வந்து நின்று அவன் கையில் இருந்த பூவைச் சட்டென்று பிடுங்கி நசுக்கிக் கீழே எறிந்தான்.
   இதை வேலு சற்றும் எதிர்ப ;பார்த்திருக்கவில்லை. அவன் உடனே கோபத்துடன் சின்னதம்பியின் சட்டையைப் பிடிக்கச் சின்னதம்பியும் அதே கோபத்துடன் வேலுவின் சட்டையைக் கொத்தாகப் பிடித்தான்.
   'உன்னோட வழியில நான் குறுக்க வரலை. அதே மாதிரி நீயும் என்வழியில குறுக்க வராத......" பற்களைக் கடித்துக் கொண்டு சின்னதம்பி சொன்னான்.
   'நானா குறுக்க வரலை. அவளாத்தான் வந்து ரோஜாவ எங்கிட்ட நீட்டினா..... இப்போ எனக்கு அவ உரிமை......"
   அவன் சொல்லி முடிப்பதற்குள் மீனா இவர்களின் நிலையுணர்ந்து அங்கே ஓடி வந்துவிட்டிருந்தாள்.
   'சக்திவேல்....."
   அவள் கத்திய வேகம் இருவரையும் திரும்பிப் பார்க்கவைத்தது. வேலுவின் கண்களில் மிகப் பெரிய ஆச்சர்யம்!!!
   அவள் தன்னை அல்லவா  ;சக்திவேல் ; என்று அழைத்தாள்!!   
  
   மீனா வேலுவைச் ”சக்திவேல்” என்று அதட்டி கூப்பிட இருவருமே அவளை அதிர்ச்சியாகப் பார்த்தார்கள். இதை மீனா கவனிக்கவில்லை. அவள் திரும்பவும்
   'சக்திவேல் முதல்ல கையை எடுங்க. நீங்களும் தான். என்ன ஆச்சி உங்க ரெண்டுபேருக்கும்?  எப்படி உங்களுக்குள்ள இப்படியான விரோதம் வந்தது? கையை எடுங்க முதல்ல." என்றாள் கோபமாக!
   இருவருமே ஒரே நேரத்தில் சட்டையை விட்டுவிட்டு கையை எடுத்தார்கள். சின்னதம்பி அவனை விட்டதும் மீனாவின் கன்னத்தில் ;பளார் ; என்று அறைந்தான். அவளின் கண்கள் கலங்கிவிட்டது. 'மீனா... எல்லாம் உன்னாலத்தான் வந்தது. வந்து ஒடனே வண்டியில ஏறு." என்றான் கோபமாக.
   அவள் கலங்கின கண்களுடன் வேலுவைப்பார்த்தாள். அவனும் என்ன செய்வதென்று அறியாமல் கைகளைப் பிசைந்தான்.
   'பாருங்க சக்திவேல்.... உங்க எதிர்லேயே என்னை அடிச்சிட்டார். நீங்க எதுவும் கேக்கமாட்டிங்களா.....?"


   அவள் வேலுவைப் பார்த்து கேட்க அவன் அவளை ஆச்சர்யம் மாறாமல் பார்த்தான்.
   'சக்திவேல்.... எனக்கு அவர் கூட போவ இஷ்டமில்லை. நான் உங்கக் கூடவே வர்றேன். நீங்களே என்னை வீட்டுல விட்டுடுங்க."
   சின்னதம்பியைக் கோபமாகப் பார்த்தபடி சொன்னாள்.
   இப்பொழுது வேலுவுக்குப் புரிந்துவிட்டது. அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே சின்னதம்பியை நோக்கினான். அவன் மீனாவை முறைத்து கொண்டு நின்றிருந்தான். அங்கே கண்மணி அவள் அப்பா அம்மா வேலையாட்கள் மற்றும் வேலுவின் சகாக்கள் அனைவருமே மீனாவை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள்.
   மீனா இப்பொழுது வேலுவின் கையைப் பிடித்து கொண்டாள். அவளுக்குச் சின்னதம்பியின் மீது அவ்வளவு கோபம். இப்பொழுது அவன் அவளை முறைத்துப் பார்த்தது இன்னும் ஆத்திரத்தை அதிகமூட்டியது. அதனால் தான் அவள் வேலுவின் கையைப் பிடித்துக் கொண்டாள்.
   ஆனால் அவள் அப்படி பிடித்ததும் சின்னதம்பி கோபமாக அவளருகில் வந்தான். மீனா மிரண்டு போய் வேலுவின் முதுகுப்புறமாக ஒளிந்தாள். அவளின் அறியாச் செய்கையால் சின்னதம்பி சற்றுத் தன்னை அமைதிப்படுத்தினான்.
   'மீனா... வா போவலாம்....."
   'இல்லை. நான் வரமாட்டேன். நானு சக்திவேலு கூடவே போறேன்." என்றாள் மிரண்டவளாக.
   'அவர் சக்திவேல் கிடையாது." என்றான் சின்னதம்பி மெதுவாக.
   'என்ன.... இவரு சக்திவேல் கெடையாதா.....?" அதிர்ச்சியுடன் வேலுவைப் பிடித்திருந்த கையை விட்டாள்.
   'ஆமா. இவர் சக்திவேல் கெடையாது. வெறும் வேல்."
   அப்படி சொன்ன சின்னதம்பியை முறைத்தான் வேல். மீனாவிடம் திரும்பினான். 'மீனா.... நான் வெறும் வேல் கெடையாது. வெற்றிவேல். நீ வா. நம்ம வீட்டுக்கு போவலாம்." மீனாவின் கையைப் பிடித்துத் தன் பக்கமாக இழுத்தான்.
   நம்பாதவளாக நின்றிருந்த மீனா வெற்றிவேல் தன்னைக் கையைப்பிடித்து இழுத்ததும் கையை உதறினாள். அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
   'நீங்க வெறும் வேல்ன்னு ஏன் எங்கிட்ட சொல்லல....?" கேட்டாள்.
   'சக்திவேலே தன்னோடப் பேர சொல்லாதப்போ நான் எதுக்கு சொல்லணும்...? தவர நான் ஒன்னும் வெறும் வேல் கெடையாது. வெற்றிவேல். வா... போலாம்....."
   திரும்பவும் அவள் கையைப்பிடித்து இழுத்தான். இப்பொழுது சின்னதம்பி அவன் கையைத் தட்டிவிட்டு மீனாவின் கையைப் பிடித்து இழுத்து கொண்டு போனான். மீனா பேசாமல் அவனுடன் சென்றாள்.
   அன்பு சொல்லும் உண்மை அடிப்பணிவதுதானே...
   வெற்றிவேல் மீனாவைப் பார்த்தபடி சிரித்துக் கொண்டு நின்றிருந்தான். அதில் யோசனை அதிகமாக இருந்தது.
   சின்னதம்பியின் மோட்டார் வண்டியின் பின்னால் அமர்ந்திருந்த மீனா.... வேலுவைத் தாண்டிப்போகும் பொழுது சொன்னாள்..
   'வேலு நீங்க இப்போ வெறும் வேலுத்தான். பேசாம எங்க சக்திவேலுக்கூட சேந்துக்கங்க. உங்களுக்கு வெற்றி தானா வரும். அப்புறம் நீங்க உண்மையிலேயே வெற்றி வேலுத்தான்." என்றாள் சத்தமாக.
   வெற்றிவேல் அவள் போய் மறையும்வரைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தான்!!


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²


   நெடுஞ்சாலைக்கு வந்ததும் சின்னதம்பி வண்டியை நிறுத்தி அவளை இறங்கச் சொல்லப் பேசாமல் இறங்கிக் கொண்டாள். அங்கே பேரூந்துக்காக காத்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் கேட்டான் 'ஏம்மா.... நா போவும் போதே இருந்தீங்க. இன்னுமா பஸ் வரல...?"
   'மூனு பஸ்சு போச்சிப்பா. ஒன்னுக்கூட நிக்கல. இப்பெல்லாம் ஒருத்தர் ரெண்டுபேருன்னா பஸ்ச நிறுத்தமாட்டுறாங்கப்பா......" என்றாள் அவள்.
   திரும்பி மீனாவைப் பார்த்தான். அவள் கோபமாக நகத்தைக் கடித்துக் கொண்டு நின்றிருந்தாள். அவன் அவளைப் பார்த்ததை உணர்ந்து அவனருகில் வந்தாள்.
   'தோ பாருங்க. நீங்க இன்னைக்கி எங்கிட்ட இப்டி நடந்துகணுது ரொம்ப தப்பு. நா எதுக்காக இந்த மாத்தூருக்கு வந்தேன் தெரியுமா....? அது தெரியாம என்னை அடிச்சிட்டீங்க. என்னை என்னோட அம்மா கூட அடிச்சது கெடையாது. அதுமட்டுமில்ல. என்னோட கையப்புடிச்சி இழுத்துகினு வந்தீங்க. எந்த உரிமையில எங்கையபுடிச்சீங்க?  எங்கிட்ட உங்களுக்கு ஏதாவது வம்புவளக்கிறதே வேலையா போச்சி. இருங்க..... இன்னிக்கி நா எல்லாத்தையும் சக்திவேல் கிட்ட சொல்லுறன்."
   பற்களைக் கடித்துக் கொண்டு கோபமாகப் பேசினாள்.
   'நீ சக்திவேலுன்னு நெனச்சி வெற்றிவேல் கையப் புடிச்சா என்னைப் பாத்துக்கினு சும்மா இருக்கச் சொல்லுறியா....?" கேட்டான் மெதுவாக.
   'எனக்குத் தெரியாம நடந்த தப்பு அது. உங்களுக்குத் தான் தெரியுமே.... மொதல்லேயே சொல்லி இருக்கலாம் இல்ல..? இருந்தாலும் நீங்க செஞ்சது தப்புத்தான். நா இத சக்திவேல்கிட்ட சொல்லாம இருக்கப் போறது இல்ல." என்றாள்.
   தூரத்தில் பேரூந்து வரும் ஓசை! மிக வேகமாக வந்து கொண்டிருந்தது.
   'நெஜமா இன்னைக்கி சொல்லப்போறியா......?" மீனாவை அழுத்தமாகப் பார்த்தபடிக் கேட்டான்.
   'ஆமாம்" அவளும் அழுத்தமாகப் பதில் சொன்னாள்.
   'அப்படின்னா... நீ என்னை விரும்பலையா.....?"
   'இல்லைன்னு அதுதான் அன்னைக்கே சொன்னேனே....."
   'அன்னைக்கி சொன்னே... இப்போ சொல்லு. நீ என்ன விரும்புறன்னு"
   'முடியாது."
   'முடியாது......?"
   'முடியாது."
   அவள் அழுத்தமாகச் சொன்னதும் சட்டென்று திரும்பி நடுத் தெருவில் வந்து நின்றான். பேரூந்து மிகமிக வேகமாக அதே சமயம் சற்றுத் தொலைவில் தான் வந்து கொண்டிருந்தது.
   அவனுடைய இந்தச் செய்கையை மீனா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை! அதிர்ச்சியில் அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவல்லை. தன்னையும் அறியாமல் தன் முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு கத்தினாள்.
   'ஐயோ.... வேண்டாம். நா உங்களைத்தான் விரும்புறேன்...."
   ட்.....ரா....க். பேரூந்து தார் சாலையைத் தேய்த்து அவனுக்கு மிக அருகில் நின்றுவிட்டது. மீனா முகத்தை மூடியிருந்த கைகளை அச்சத்துடன் மிக மெதுவாக விலக்கினாள். அதற்குள் கண்டெக்டர் இறங்கிச் சின்னதம்பியிடம் வந்தார்.
   என்ன தம்பி. இப்டி செஞ்சிட்டீங்க? நாங்க ரொம்ப பயந்துட்டோம்பா....." என்றார் நடுங்கும் குரலில்.
   ‘நீங்க பயபடுறது இருக்கட்டும். ஒருத்தர் ரெண்டு பேருன்னா வண்டிய நிறுத்தம போறிங்களாமே...... என்ன விசயம்? ஒருத்தர் ரெண்டுபேரெல்லாம் மனுஷன் இல்லையா....?"
   'இல்ல தம்பி நேரம் போதலை..... அதனாலத்தான்......" பேச்சை இழுத்தார்.
   'சரிசரி இத்தோட நிறுத்திக்கங்க. இன்னையிலேர்ந்து எங்க ஆளுங்க கங்காணிப்பாங்க. யாராவது இருந்து பஸ் நிக்காம போச்சின்னா.... அந்தப் பஸ்சு அப்புறம் இந்த வழியில போவமுடியாது." என்றான் சற்று கோபமாக.
   'சரிப்பா இனிமேல இப்டி நடக்காது." என்றார் அவர் பணிவாக. தன் பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்தான். 'இந்த பொண்ணையும் அந்த அம்மாவையும் ஆத்தூர்ல எறக்கிவிடுங்க." என்றான் அதிகாரமாக.
   மீனாயைப் பார்த்தான். அவள் இவனை முறைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள்.
   'ம்.... வந்து பஸ்சுல ஏறு." அவன் அதிகாரத்துடன் அழைக்க அமைதியாக வந்து ஏறினாள். அப்பொழுது மிக மெதுவாகச் சொன்னான்.
   'என்மேல இவ்ளோ ஆசைய வச்சிக்கினு எல்லாத்தையும் மூடி மறச்சிடலாம்ன்னு பாத்தியா.....?"
   அவன் கிசுகிசுப்பாகச் சொல்ல மீனா பஸ்சில் ஏறக் கிளம்பியது.

                                           (தொடரும்)

No comments :

Post a Comment