மீனா..
சக்திவேல் கண்மணியின் திருமண அழைப்பிதழைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள்.
நம்புவதற்கு மனம் மறுத்தாலும்.. கையிலிருந்த அழைப்பிதழ் மெல்ல அசைந்து உண்மை தான்
என்றது.
“என்னம்மா.. நீ இதத்தான எதிர்
பார்த்த? இதுக்காகத்
தான அன்னைக்கி ஆஸ்பத்திரியில இருந்து யாருக்கும் தெரியாம கல்கத்தாவுக்கு ஓடி வந்த?
நீ நெனச்ச மாதிரியே
நடக்கப் போவுது. நாளைக்கி காலையில கல்யாணம். நீ இங்கத்தான் இருக்கிறன்னு அங்க
யாருக்கும் தெரியாது. நீ கண்டிப்பா வந்துடுவேன்னு சத்திவேலு நெனச்சாரு. ஆனா.. ஒரு
வருஷம் ஓடிப் போயிடுச்சி!
அதே மாதிரி
அந்தப் பொண்ணு கண்மணியும் வெற்றிவேலு ஐய்யாவ கண்ணாலம் கட்டிக்க இஷ்டப்படாம மேல
படிக்கணும் மேல படிக்கணும்ன்னே காலத்த ஓட்டுச்சி. எவ்ளோ நாளைக்கி தான் படிப்ப
சொல்லி ஏமாத்த முடியும்? ஐயாவும் கண்மணிக்கி வேற மாப்பிள்ளை பாத்துக்கங்க. அவ
விருப்பம் போல யாருக்கு வேணா கட்டிக் குடுங்கன்னு சொல்லிட்டாரு.
கடைசில
கண்மணி வீட்டாரும் சத்திவேலு அம்மாவும் சேந்து பேசி முடிவெடுத்து நிச்சயதார்த்தம்
முடிச்சிட்டாங்க. நா காசி ராமேஸ்வரம்ன்னு யாத்தரை கௌம்புனதால.. சத்திவேலு ஐயாவோட
அம்மா.. இந்தப் பத்திரிக்கையை எல்லா சாமி கால்லயும் வச்சி எடுத்துவாங்கன்னு
குடுத்தாங்க. நா கல்கத்தா காளிய தரிசிச்சிட்டு மேல போலாம்ன்னு இங்க வந்தா.. ஒடம்பு
சரியில்லாம போயிடுச்சி. அதப் பாத்துக்கினு போவத்தான் இந்த ஆஸ்பத்திரிக்கி வந்தேன்.
அதனால உன்ன பாக்க முடிஞ்சிது. இதுவும் நல்லதுக்குத்தான்." என்றார் கண்மணி
ஊர்காரர்.
மீனா
அனைத்தையும் கேட்டுக் கொண்டு நின்றிருந்தாள். அவளுக்கு அவள் மனம் சந்தோஷம்
அடைகிறதா..? ஏமாற்றம் அடைந்துவிட்டதா..? என்று இனம் பிரித்துப் பார்க்க முடியவில்லை.
தன்னுடையதைத் தட்டிப்பறித்தால் தான் கோபம்.. ஏமாற்றம் எல்லாம்! இது அவளே
வேண்டாம் என்று உதறிவிட்டு வந்தது தானே.. பிறகு எதற்காகக் கலங்க வேண்டும்?
“ஏம்மா.. இதுல ஒனக்கு சந்தோஷம்
இல்லையா..?“ அவர்
ஆறுதலாகக் கேட்டார்.
“சந்தோஷம் தாங்க. ஆனா.. வேற
ஒருத்தர் விரும்பனத அவரிடமிருந்து தட்டிப் பரிச்சி.. இன்னோருத்தர் கிட்டக் கொடுக்கறாங்களே..
அத நெனச்சி தான்.."
“யாரம்மா சொல்லுற? வெற்றிவேலு ஐயாவையா..?
அவரு இத சந்தோசமா
ஏத்துகிட்டாரு. அவரு சத்திவேலுக்காக ஒதுங்கல. கண்மணிய யாருக்கு வேணா
கட்டிக்குடுங்கன்னு சொல்லிட்டாரு. அதனால.. ரெண்டு வீட்டுப் பெரியவங்களா சேர்ந்து
முடிவெடுத்தாங்க. ஆனா.. எங்க எல்லாருக்குமே.. சந்தோசமான முடிவுத்தான். நா தூக்கி
வளத்த பொண்ணு. அதுக்குப் புடிச்ச வாழ்க்க அமைஞ்சா சந்தோசமாத் தான இருக்கும். ஆனா..
இப்ப உன்னப் பாத்தபுறம் கவலையா இருக்குமா.."
“வேண்டாங்க.. என்ன பாத்துக் கவல
படாதீங்க. நா இப்பத்தான் சந்தோஷமாவும் நிம்மதியாவும் இருக்கறேன். சக்திவேலுவுக்கு
எப்படியாவது கல்யாணம் ஆகணும்ன்னு நெனைச்சேன். அவர் கூட நா இருந்தா.. நிச்சயம் அவரு
வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்க மாட்டாரு. அதுக்காகத் தான் எனக்குக் கெடச்ச சொந்த
பந்தத்தயெல்லாம் விட்டுட்டு வந்தேன். நா வந்தது வீண் போகல. அது மட்டுமில்ல அவர
விரும்பின கண்மணியே அவருக்குக் கிடைக்க போறா. இதை விட வேற சந்தோஷம் என்ன வேணும்?
ஐயா.. எனக்கு
ஒரேயொரு உதவி செய்வீங்களா..?"
“சொல்லுமா.."
“நீங்க ஊருக்கு போனதும்.. என்னை
இங்க பாத்ததை யார்கிட்டையும் சொல்லக் கூடாது. செய்வீங்களா..?"
அவர் நிமிர்ந்து
அவளைப் பார்த்தார்.
“ஆமாங்கையா.. நீங்க
சொல்லிட்டீங்கன்னா அவரு நிச்சயம் என்ன பாக்க வருவாரு. என்னால அவங்க வாழ்க்கையில
சின்னதா கீறல் கூட விழக்கூடாது. நா இல்லாதவ. இல்லாதவளாகவே இருந்திடுறேன்."
கைகூப்பிக்
கேட்டாள். அவரும் உடனே கைகூப்பிச் சொன்னார்.
“மீனாம்மா.. நா சாமிய பாக்க ஊர்
ஊரா போறேன். என் அப்பாரு சொல்லுவாரு. யாரு ஒருத்தர் தனக்காக வாழாம அடுத்தவருக்காக
வாழுறாங்களோ.. அவங்கத்தான் சாமின்னு சொல்லுவாரு. இங்க நீ எனக்குச் சாமியா
தெரியிறம்மா. நல்லா இரு. உன்னோட நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும்மா."
வாழ்த்திவிட்டுச் சென்றார். நல்ல மனத்துடன் வாழ்த்தும் உண்மையான
வாழ்த்துக்கள் கடவுளின் வாயிலிருந்து வரும் வார்த்தைக்குச் சமம்.
அவர்
இவளைக் கடவுள் என்று சொல்லி விட்டு அவர் கடவுளாகிச் சென்றார்.
²²² ²²² ²²²
²²² ²²² ²²²
²²²
மனிதர்கள் எவ்வளவு
துக்கங்கள் வந்தாலும் தனிமையில் அனுபவித்து விடுவார்கள்! ஆனால் ஒரு சிறிய
இன்பத்தைக் கூட தனிமையில் அனுபவிக்க விரும்ப மாட்டார்கள். அந்தச் சந்தோஷத்தை
யாரிடமாவது சொல்லி தனது மகிழ்ச்சியை வெளிக்காட்டி விட வேண்டும் என்று
நினைப்பார்கள்!
இதில் மீனா
மட்டும் விதிவிளக்கா என்ன? சக்திவேலுவின் திருமணத்தைப் பற்றிப் பேச ஷார்மியைத்
தனதறைக்கு வரச்சொல்லி அழைத்திருந்தாள்.
இங்கே வந்த
இந்த ஒரு வருடமும் ஷார்மி தான் எல்லாம் அவளுக்கு!
தான்
மருத்துவமனையில் இருந்து கிளம்பிச் சென்று இரயில் நிலையத்தில் தொலைபேசியில் அவளிடம்
பேசி.. தான் அவளைப் பார்க்க வரப் போவதாகச் சொன்னதிலிருந்து.. இந்த நேரம் வரை எல்லா
உதவிகளையும் செய்தவள் ஷார்மி தான்.
மீனா சொன்ன
எல்லா விசயத்தையும் கேட்டுவிட்டுக் கடைசியில் “நீ சக்திவேலுவிடம் சொல்லிக் கொள்ளாமல் வந்தது பெரிய தவறு“ என்று
கண்டித்தாள்.
“நீ நல்ல பாதுகாப்பான நிலையில
இருக்கிறத சக்திவேலுவிடம் தெரிவிக்கலாம்“ என்று ஷார்மி
சொல்லியதர்க்கும் மீனா மறுத்துவிட்டாள்.
“கடவுள் மனிதர்களுக்கு மறக்கும்
தன்மையைக் கொடுத்தது மனிதனுடைய வரப்பிரசாதம்! நிச்சயம் காலம் என்னை மறக்கச்
செய்யும். அல்லது வெறுக்கச் செய்யும். நான் இருப்பதோ.. இல்லாமல் இருப்பதோ..
அவருக்குத் தெரிய வேண்டாம்.“ என்று சொல்லிவிட்டாள்.
“மறப்பதற்கோ.. வெறுப்பதற்கோ..
காதல் கண்முன் நிகழும் நிகழ்ச்சி கிடையாது. அதை உள்ளத்து உணர்வால் மட்டும் தான்
அறிய முடியும். அப்படி அறிந்துவிட்ட மனத்தை எந்தப் பெரிய மனிதனாலும் மறக்கடிக்க
முடியாது. மறந்து விட்டது போல நடிக்கலாம். நடிப்பு என்பது உண்மையில்லை."
என்றாள் ஷார்மி.
“இல்லை. ஷார்மி. காலம் நல்ல
மருந்து. நிச்சயம் அது காதல் என்ற நோயைக் குணமாக்கிவிடும். வேண்டுமானால் வடு
இருக்கலாம். ஆனால் வலி இருக்காது. ஏன்னா அது மறுத்துப் போய்விடும். மறுத்துப்
போனபிறகு நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கும். இது தான் காதல். இப்படி தான் உலகத்தல
எல்லோரும் வாழுறாங்க. நீ வேனா பாரு. சக்திவேலு மனசுமாறி நிச்சயமா வேற கல்யாணம்
பண்ணிக்குவாரு. அவருக்கு விருப்பம் இல்லைன்னாலும் மத்தவங்க வருப்புறுத்தியாவது
அவருக்குக் கல்யாணம் செஞ்சி வைப்பாங்க." என்று அழுத்தமாகச் சொல்லியிருந்தாள்.
இதோ.. அவள்
சொன்னது உண்மை என்றாகிவிட்டது. இதைச் சொல்வதற்காகத் தான் ஷார்மியைத் தன் அறைக்கு
வரவழைத்து நடந்ததைச் சொன்னாள். திருமணப் பத்திரிக்கையைக் காட்டினாள்.
ஷார்மி
பத்திரிக்கையை ஆச்சர்யமாகப் பார்த்தாள். புரியாத மொழி என்றாலும்.. மீனாவின்
முகமலர்ச்சி அதில் உள்ள வார்த்தைகளின் அர்த்தங்களைச் சொன்னது.
“இப்ப என்ன சொல்லுற? காதலை மறக்க முடியாதுன்னு
சொன்னியே.. பாத்தியா..? எல்லாம் இனக்கவர்ச்சி தான்! உடம்பு மேல இருக்கிற ஈடுபாடுதான்!
மற்றப்படி ஒன்றுமே கிடையாது. இதைத் தான் காதல் என்ற ஒரு போர்வையைப் போட்டு மூடி
வைக்கிறோம். மூடி இருக்கிறதால அதுல என்ன இருக்குதுன்னு அறிய ஒவ்வொருத்தரும் ஆவலா
இருக்காங்க. ஏதோ ஒன்று அதனுள்ளே இருக்கிறது என்று கற்பனை செய்துகிறாங்க. ஆனால்..
ஒன்றுமே கிடையாது!"
மீனா தெளிவாகப் பேசினாலும் அவள் குரலில்
ஏமாற்றம் தெரிந்தது தான்! ஷார்மி சிரித்து கொண்டாள்.
கிடைக்காததை வேண்டாம் என்று ஒதுக்கிவிடலாம். ஆனால் கிடைத்ததை ஒதுக்கிவிடக்
காதலில் முடியாது. இவள் முயற்சி பண்ணுகிறாள். பாவம் என்றது அவள் மனம்! ஆனால்
வாயைத்திறந்து எதையும் சொல்லவில்லை. பேச எதுவும் இல்லை. சிறிய துக்கங்கள் என்றால்
எதையாவது பேசும். ஆனால் பெரிய துன்பங்கள் மனிதர்களின் மனத்தையும் வாயையும்
மௌனமாக்கி விடுகிறது!
ஷார்மி
இதைக் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை தான்! அவளுக்குக் காதல், ஆண்கள் என்றால்
வெறுப்பு! ஆனால் மீனாவின் கதையைக் கேட்டதும் காணாத சக்திவேலின் காதல் மீது அதிக
நம்பிக்கை வத்திருந்தாள். ஒருநாள் இல்லை. ஒருநாள் மீனா அவனுடன் சேர்ந்து விடுவாள்
என்று நினைத்திருந்தாள்.
அது இல்லை
என்றானதும் வெறுப்பு.. சூன்யம்.. வெளிக்காட்ட முடியாத தவிப்பு. நமக்கே இப்படி என்றால்..?
மீனாவால் இதை
எப்படி இவ்வளவு சாதாரணமாக ஏற்று கொள்ள முடியும்..? “கர்த்தரே..
இவளைக் காப்பாற்று“ மனத்தில் பிராத்தித்தாள்.
ஆனால்
மீனா.. எப்பொழுதும் போலத்தான் வளையவந்தாள். எதையுமே அவள் மனம் முகம்
வெளிக்காட்டவில்லை. ஒரு நாள் நேரடியாகவே ஷார்மி கேட்டுவிட்டாள்.
“ஷார்மி.. என்னோட காதலைவிட கண்மணி,
சக்திவேல் மேல் வைத்த காதல் சக்தி வாய்ந்தது. அதனால் தான் இவ்வளவு காலம் கழித்தும்
பிரச்சனைகள் வந்தும் அவள் அவரைக் கல்யாணம் செய்து கொண்டாள். நா அவரை அந்த
அளவுக்குக் காதலிக்கலைன்னு நெனைக்கிறேன். அதனால தான் அவர் எனக்குக் கிடைத்தும்
அவர் கூட வாழ எனக்குக் கொடுத்து வைக்கவில்லை" என்றாள்.
அதன் பிறகு
மகிழ்ச்சியாக முகத்தை வைத்துக் கொண்டாலும் அவள் கண்களின் ஓரத்தில் ஒரு சிறு துளி
சோகம் ஒட்டிக் கொண்டே தான் இருந்தது! அது ஷார்மியின் கண்களுக்கு மட்டுமே
தெரிந்தது.
(தொடரும்)
தொடர்கிறேன்
ReplyDeleteகதையானாலும் தொடர்ந்து வரும் ஏமாற்றங்கள் அவசியம் தானாவென தோன்றும் படி கதையின் போக்கு செல்கிறது.
ReplyDeleteஎன்னதான் விட்டுகொடுத்தல் , இரக்கம்,அன்புகாட்டல் என்றிருந்தாலும் தனக்கு மிஞ்சித்தன தானமும் தருமமும் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளும் விதமாக இராது அளவுக்கு மீறி விட்டுகொடுப்பதானது மீனா எனும் கதாபாத்திரத்தை ஏமாளியாகவே உணரச்செய்கிறத். அதை விட சக்திவேலின் அன்பும் காதலும் மீனாவால் புரிந்து கொள்ளப்படாத நிலையானது சக்திவேலுக்கென ஒரு மனம் அதில் அன்பு காதல் உணர்வு உயிப்பு இருக்கும் என உணராது தன்னை மட்டுமே சுயத்தோடு நோக்குவதாக தோன்றும்படி செய்கிறது.
அதை விட சக்திவேல் சொந்த மாமா பையன் என்றானபின்னும் இந்தளவு விட்டுகொடுப்பு தேவையற்றது என்பது என் கருத்து.
நிஜமாகவே மீனா எனும் கதாபாத்திரத்தை நினைக்க அது கற்பனையானாலும் கூட கோபம் வருகிறதே தவிர பரிதாபம் வரவில்லை.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சென்பது அனுபவபூர்வமான் உண்மை. நான் உங்கள் கதையிஅ தொடர்ந்து படித்து வருகிறேன் அப்பபோ கருத்தும் இட்டேன்.
அடுத்து தொடருங்கள்.