Thursday, 25 February 2016

மாற்றான் தோட்டத்து மரிக்கொழுந்து ! – 4
    குழந்தை பிறந்த மறுநாள் முரளீதரன் குழந்தையைப் பார்க்க குடிசைக்கு வந்தான் . வெளியே நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு குழந்தையைத் தூக்கி கொஞ்சியவனைத் திலகவதி நச்சரித்தாள்.
    ‘‘என்னங்க, பார்த்தீங்களா… ? அந்தக் கண்கள பாத்தீங்களா…. ? சூரியன் மாதிரி பளிச் பளிச்ன்னு இருக்குது இல்ல…. ? அந்தக் கண்ணுல அப்படி ஒரு ஒளி தெரியுது பாருங்களேன்…‘‘
    உற்று பார்த்துகிட்டு சொன்னான் முரளீதரன்.
    ‘‘எனக்கு ஒண்ணும் தெரியலையே திலகவதி…‘‘
    ‘‘போங்க. உங்களுக்குக் கலைகண்ணே கிடையாது. எனக்கென்னமோ இந்த கண்கள் சூரியனை மாதிரி தான் பளீச்சினு தெரியுது….‘‘
    ‘‘எனக்கு கலைக்கண் இல்லைன்னு நீ சொல்லுறியா…. ? எனக்கு கலைக்கண் இல்லைன்னா முப்பது நாப்பது பொண்ணுங்க போட்டோவுல உன்னை எப்படி தேர்ந்தெடுத்தேன் ? மரிக்கொழுந்த எப்படி வேலுவுக்கு கட்டி வச்சேன்… ?‘‘
    ‘‘உக்கும். இதுல ஒண்ணும் கொறைச்சலில்ல‘‘ முகவாய் கட்டையைத் தோளோடு இடித்து அழகு காட்டினாள்.
    ‘‘கொழந்தைய பாருங்கன்னா… பொண்ணுங்கள எப்படி தேர்ந்தெடுத்தேன்னு சொல்லுறீங்களே….‘‘
    ‘‘அதுக்கென்ன பண்ணுறது…. ஒனக்கு தெரிஞ்ச சூரியன் எனக்கு தெரியலையே….. டேய் பையா… கண்ண முழிச்சி பாருடா…..‘‘ என்று சொல்லிவிட்டு லேசாக ஒரு தட்டு தட்டினான்.
    குழந்தை உடம்பை நன்றாக முறுக்கிவிட்டு சற்று நேரம் கழித்து ‘ங்ஙே‘ என்று அழுகத் தொடங்கியது.
    அவன் அடித்ததையும் குழந்தையின் அழுகையையும் பொறுக்காத திலகவதி குழந்தையை வாங்கிக்கொண்டாள்.
     கையைக் கட்டிக்கொண்டு அருகில் நின்றிருந்த வேலுவிடம் கேட்டான் முரளீதரன்.
     ‘‘வேலு, கொழந்தைக்கி என்ன பேரு வச்ச… ?‘‘
    ‘‘உங்க வாயாலே நல்ல பேரா வைய்யிங்க சின்னய்யா…‘‘
    வேலு தலையைச் சொரிந்தபடி சொன்னான்.
    ‘‘என் வாயாலேயா…. ? அதுதான் சொல்லிட்டாளே உன் சின்னம்மா. சூரியன் மாதிரி கண் இருக்குதுன்னு. அதனால சூரியான்னு வச்சிடலாம்‘‘ என்று சொல்லிவிட்டு கையிலிருந்த செயினைக் குழந்தைக்குப் போட்டுவிட்டு அதைத் தூக்கி அதன் காதில் சொன்னான் ‘‘சூரியா சூரியா‘‘ என்று.
    திலகவதி தன் கணவனைப் பெருமையுடன் பார்த்தாள்.
    குடிசையை விட்டு வெளியே வராமல் உள்ளே இருந்தபடியே வெளியில் நடந்த பேச்சு வார்த்தையைக் கேட்டுக்கொண்டிருந்த மரிக்கொழுந்துவிற்கு ‘சூரியா‘ என்ற பெயர் மிகவும் பிடித்திருந்தது.
    வேலைக்காரன் பிள்ளை தானே என்று எண்ணாமல் சுப்பைய்யா, கருப்பைய்யா என்று பெயர் வைக்காமல் தன் குழந்தைக்கு நிகரான பெயர் வைத்திருக்கிறாரே…. என்று எண்ணும் போது மரிக்கொழுந்துவின் மனம் மகிழ்ந்தது.
   தகுதி அறியாமல் தாழ்த்தும் போது மனம் வலிக்கும்.
   தகுதியை எண்ணாமல் தனதானது எதுவும் என்று எண்ணும் மனம் தன்னளவிலேயே எதையும் உயர்த்தும்.
   அவர்களின் குழந்தையின் பெயர் சத்தியா.
   இந்தக் குழந்தைக்குப் பெயர் சூரியா.
    அதன் பிறகு வந்த நாட்களிலும் ஒரு நாள் தவறாமல் காலையும் மாலையும் குழந்தையைப் பார்க்க குடிசைக்கு வருவாள் திலகவதி.
    ‘‘எனக்கென்னமோ தெரியலை மரிக்கொழுந்து. இந்த குழந்தையோட கண்களைப் பார்க்க ஆசையா இருக்குது‘‘ என்று குழந்தையைத் தூக்கி வைத்திருப்பாள்.
   
    மரிக்கொழுந்து தன் குழந்தையின் கண்களை உற்று உற்று பார்த்தாள். எந்த ஒரு சூரியனும் தெரியவில்லை. ஒரு பெருமூச்சு விட்டாள்.
    ‘அந்த ஒளியெல்லாம் இந்த ஒளி பொருந்தின கண்களுக்குத்தான் தெரியுமோ….‘ என்ற எண்ணம் வந்தது.
    இனி அந்த ஒளி பொருந்தின கண்களை என்றைக்குப் பார்க்கப் போகிறோம் ? என்ற ஏக்கம் வந்தது. ஏக்கம் அழுகையாக மாறி கண்களிலிருந்து வழிந்தக் கண்ணீரையும் துடைக்காமல் உட்கார்ந்திருந்தாள், காமாட்சி வந்ததைக் கூட அறியாமல்.
    ‘‘என்ன மரிக்கொழுந்து… இந்த மாதிரி அழுதுகினே இருந்தா செத்தவ வந்திடவா போறா…. கொஞ்சம் மனச தேத்திக்கோம்மா…. இந்த இதைச் சாப்பிடு…‘‘
    ஒரு தட்டில் வெண்பொங்கலும் வடையும் வைத்து வாழை இலையால் மூடி இருந்தது.
    மரிக்கொழுந்துவிற்கு பசித்தது தான். ஆனால் மனது சாப்பாட்டை வெறுத்தது.
    பேசாமல் தட்டைப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தாள்.
    ‘‘மரிக்கொழுந்து, சாப்பிடு ஆத்தா…. ஒனக்காக இல்லன்னாலும் இந்த கொழந்தைகளுக்காவது சாப்பிட்டுத்தான் ஆகணும். சாப்பிடு மரிக்கொழுந்து…‘‘
    காமாட்சி கொஞ்சும் குரலில் சொன்னாள்.
    ‘‘சரி ஆத்தா…. நா கொஞ்ச நேரங் கழிச்சி சாப்பிடுறேன். மாமா எங்க ஆத்தா…. ?‘‘
    சாப்பாட்டைப் பார்த்ததும் கணவனின் ஞாபகம் வர கேட்டாள். நேற்று முன்தினம் பார்த்தது. சாப்பிட்டாரோ இல்லையோ…. தெரியவில்லை….
    தாய்தான் குழந்தையின் பசி அறிவாள் என்றில்லை. மனைவியும் அறிவாள்…. பெண்மை என்பதே தாய்மை தானே.
    ‘‘வேலுவா… ? நான்தான் முரளீ கூடவே இருக்கச் சொன்னேன். நா பாத்தா சொல்லி அனுப்புறேன். நீ சாப்பிடு. கொஞ்ச நேரத்துல வர்றேன்.‘‘ என்று சொல்லிவிட்டு காமாட்சி ஆத்தா போய்விட்டாள்.
    ஆத்தா போனதும் மரிக்கொழுந்து தட்டைப் பார்த்தாள். உடனே வேலுவின் ஞாபகம் வந்தது. அன்று திலகவதி சொன்னதிலிருந்து, வேலு சாப்பிட்டானா என்று கவனிக்காமல் அவள் சாப்பிடுவதை நிறுத்தி இருந்தாள்.
    திரும்பவும் பழைய நாட்களே மனத்தில் குடியேறியது.
    அன்று மூன்றறை மணியளவில் டவுனுக்குப் போய் விட்டு பசியுடன் வந்தான் வேலு.
    மரிக்கொழுந்து அவனிடம் இரண்டு மாத இதழ்களை வாங்கி வரச் சொல்லி இருந்தாள்.
    வேலு வந்ததும் ஆவலாகப் போய் கேட்டாள்.
    ‘‘நீ இன்னமோ பேர் சொன்னியே…. அத கடையில போயி மறந்துட்டேன் மரிக்கொழுந்து. வேற எந்த புக்கையாவது வாங்கினா நீ படிப்பியோ மாட்டியோன்னு வாங்காம வந்திட்டேன் மரிக்கொழுந்து….‘‘ என்றான்.
    மரிக்கொழுந்துவிற்கு ஏமாற்றமாக இருந்தது. எதிர்பார்க்கும் மனதுக்குக் கிடைக்கவில்லை என்றால் ஏமாற்றம் வரும் தான் !
    கோபமாக அவனைப் பார்த்தாள்.
    ‘‘சரி சரி… அடுத்த முறை போனா ஒழுங்கா வாங்கியாறேன். பசிக்குது, சாப்பாடு எடுத்துவை…‘‘ என்று சொன்னவன் கொண்டு வந்த பணத்தைக் கொண்டு போய் திலகவதியிடம் நீட்டினான்.
    ‘‘வேலு, மணி மூனறைக்கு மேலாவுது…. கையில தான் பணம் இருந்ததே.. ஓட்டலில் சாப்பிட்டு வந்திருக்கலாம் இல்லையா…‘‘
    வேலு, ‘‘எதுக்கு சின்னம்மா வீண் செலவு….‘‘ தலையைச் சொரிந்தபடி நின்றான்.
    ‘‘ம்…. பொண்டாட்டி கையால சாப்பிடணும். அதனால தானே சாப்பிடாமல் வந்தே…. ?‘‘
    ‘‘போங்க சின்னம்மா… அப்படியெல்லாம் இல்ல. உங்க கை பக்குவத்துல சாப்பிட்டு ஓட்டல் சாப்பாடு பிடிக்க மாட்டுது…‘‘
    ‘‘ஐஸ்ஸா… சரி சரி போய் சாப்பிடு. மணியாவுது.‘‘
    அவள் சொல்லித் துரத்தினாலும் சாப்பாடு போட்டால் தானே சாப்பிவதற்கு !
    மரிக்கொழுந்து வேண்டுமென்றே கவனிக்காதவள் போல கூடத்தில் உட்கார்ந்து பூக்கட்டிக்கொண்டு இருந்தாள்.
    இரண்டு முறை இவன் இவளைக் கூப்பிட்டும் எழுந்து வரவில்லை. அவனுடைய குரலைக் கேட்ட திலகவதி தான் வந்து அதட்டினாள்.
    ‘‘மரிக்கொழுந்து, எழுந்து போய் வேலுவுக்கு சாப்பாடு போட்டுட்டு வந்து இதைச் செய்‘‘ என்றாள்.
    மரிக்கொழுந்து வேண்டா வெறுப்பாக எழுந்தாள், திலகவதி சொல்லி விட்டாளே என்று.
    கணவனுக்குச் சாப்பாடு போட்டுவிட்டு பேசாமல் அருகில் நின்றாள்.
    வேலுவுக்கோ அதிகப் பசி.
    அவசர அவசரமாக சோற்றைப் பிசைந்து ஒரு உருண்டையை வாயருகே கொண்டு போகவும் மாடியிலிருந்து ‘வேலு‘ என்று சின்னய்யா கூப்பிடவும் சரியாக இருந்தது.
    கையிலிருந்த கவளச் சோற்றை அப்படியே தட்டில் போட்டுவிட்டு அவசர அவசரமாக கையைக் கழுவிவிட்டு மாடிக்கு ஓடினான்.
    அவன் சற்று நேரம் பொறுத்து வருவான் என்று காத்திருந்தாள்.
    அதே மாதிரி வந்தான். வந்தவன், ‘‘மரிக்கொழுந்து நான் அப்புறம் வந்து சாப்பிடுறேன். எடுத்து வை‘‘ என்று சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திருக்காமல் வெளியே போய்விட்டான்.
    மரிக்கொழுந்துவிற்குக் கவலையாக இருந்தது. எவ்வளவு ஆசையாகச் சாப்பிட உட்கார்ந்தான். சாப்பிடாமலேயே போய்விட்டானே… தட்டின் மீது ஓர் இலையை எடுத்து அதை மூடிவிட்டு கூடத்திற்கு வந்தாள். கூடத்தில் திலகவதி உட்கார்ந்திருந்தாள்.
    மரிக்கொழுந்து அங்கே வந்ததும் தன் கிட்டே வரும்படி அழைத்தாள்.
    அவள் அருகில் சென்ற மரிக்கொழுந்து ‘‘என்னக்கா….‘‘ என்றாள்.
    ‘‘மரிக்கொழுந்து, மனிதன் போதும் என்று சொல்லுற ஒரே பொருள் என்னன்னு தெரியுமா ?‘‘
    மரிக்கொழுந்து யோசித்தாள். மனிதன் போதும் என்று சொல்லக்கூடிய பொருள் கூட உலகில் உண்டா ? எந்தப் பொருளை இலவசமாகக் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வான் தான். அப்படி போதும் என்று சொல்லக்கூடிய பொருள் எதுவாக இருக்கும்…. என்று யோசித்த படியே திலகவதியைப் பார்த்தாள்.
    ‘‘என்ன தெரியலையா ?‘‘
    ‘‘இல்லக்கா…‘‘
    ‘‘மனுசன் போதும் என்று சொல்லுற ஒரே பொருள் சாப்பாடு தான். ஒருத்தர்க்கிட்ட எந்தப் பொருளையும் எவ்வளவு கொடுத்தாலும் வாங்கி வைத்துக்கொள்வான். ஆனால் எவ்வளவு பெறிய பெருந்தீனிக்காரராக இருந்தாலும் அவரால ஒரு அளவுக்குத் தான் சாப்பிட முடியும். வயிறு ரொம்பியதும் போதும் என்று சொல்லித்தான் ஆகணும். புரியுதா… ?‘‘
    ‘‘புரியுதுக்கா…‘‘ தலையாட்டினாள்.
    ‘‘மனுசன் போதும் என்று சொல்லும் இந்த சாப்பாட்டை நாம் மனநிறைவோட போடணும். இப்ப பாரு வேலுவ. வயிறு நிறைய பசி இருந்தது. தட்டு நிறைய சோறு இருந்தது. மனசு நிறைய ஆசை இருந்தது. ஆனா சாப்பிட முடிஞ்சிதா ? இல்லையே…. இவ்வளவும் இருந்து என்ன ? சாப்பிடாம தானே வெளிய போச்சி. அதனாலதான் சொல்லுறேன். எவ்வளவு கோவம் இருந்தாலும் சாப்பாடு போடும் போது அதையெல்லாம் தள்ளி வச்சிட்டு சந்தோஷமா போடனும். என்ன… ?‘‘
    ‘‘சரிக்கா….‘‘
    ‘‘அதுக்காக கோபப்படாம இருக்கணும்ன்னு நான் சொல்லவரலை. சாப்பிட்ட பிறகு கேளு. நம்முடைய உரிமையை நாம எப்போதும் விட்டுக் கொடுக்கக் கூடாது. சாப்பிட்டப் பிறகு பொறுமையா கேட்டால் அவங்க தப்பை உணருவாங்க. அதை விட்டுட்டு தொடக்கத்திலேயே கேட்டால் பசி, போய்வந்த அலுப்பு, எல்லாம் சேர்ந்து அவர்களை எரிச்சலூட்டி விடும். என்ன மரிக்கொழுந்து நான் சொல்லுறது புரியுதில்ல…. இப்ப மட்டுமில்லை. எப்பவுமே நீ இப்படித்தான் நடக்கணும் என்ன…. ?‘‘
    அவள் சொன்னதின் உண்மையையும் சொல்லிய விதத்தின் தன்மையையும் புரிந்துக்கொண்டு ‘‘சரிக்கா‘‘ என்று தலையாட்டினாள் மரிக்கொழுந்து.
   ஆனால்… அந்தச் சாப்பாடு அவளுக்கே கிடைக்காத அளவிற்கு அவள் வாழ்வில் விதி விளையாடும் என்பதை அவள் அறியவில்லை.


(தொடரும்)

2 comments :

  1. அடுத்த பதிவுக்குக் காத்திருக்கேன். அருமையாக சிறிதும் தொய்வில்லாமல் கொண்டு செல்கிறீர்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. nice update eagerly waiting for next

    ReplyDelete