எது எது எந்தெந்த நேரத்தில் நடக்கவேண்டுமோ அது அது அந்தந்த நேரத்தில் நடந்து விடும்! இது காலத்தின் அவசரமா..? காலத்தின் கட்டாயமா..?
அவசரமோ.. கட்டாயமோ.. நடப்பது நடந்தே தான் தீரும் என்பதை விதியின் மேல் பழியைப் போட்டு விடலாம்!
சக்திவேலுவும் அவன் ஊர்காரர்களும் அந்தக் கல்யாண மண்டபத்தில் நுழையும் பொழுது.. கைகளைப் பின்புறம் கட்டப்பட்டு.. வாயைத் துணியால் கட்டி.. இரண்டு பேர் பிடித்திருக்க.. மீனாவின் கழுத்தில் வேந்தன் தாலியுடன் இருந்த தங்கச் சங்கிலியை மாலை போல் அணிவித்தான்!
வந்தவர்கள் அனைவரும் வாயடைத்துப் போய் செய்வதறியாது நின்று விட்டார்கள். எல்லோருடைய கண்களிலும் மனத்திலும் அதிர்ச்சி!
மீனாவின் பின்புறம் வெற்றிவேலுவும் லட்சுமணனும் நின்றிருந்தார்கள். தாலிகட்டிவிட்ட வேந்தன் வீராய்ப்பாய்ப் சிரித்தான். அவன் சிரித்த சிரிப்பலை கல்யாண மண்டபத்தில் அங்குமிங்கும் மோதி எதிரொலித்தது.
சக்திவேலைப் பார்த்து ஏளனமாகச் சொன்னான்.
'டேய் சத்திவேல்.. அன்னைக்கி என்ன செஞ்ச..? இவ கையில மோதரத்த போட்டு இவ எனக்குத்தான் சொந்தம்ன்னு சொன்னயில்ல. இதோ பாரு. நா தாலியே கட்டிட்டன்;. இப்போ என்ன செய்வியாம்? இனிமே இவ என்னோட பொண்டாட்டி."
மீனாவிடம் திரும்பினான்.
'ஏய் மீனா.. அன்னைக்கி நீ இன்னா சொன்ன? தாலிய கட்டிட்டு தொடறவன் தான் ஆம்பளன்னு சொன்ன இல்ல.. தோ தாலிய கட்டிட்டன். போதுமா..? இன்னும் வேற ஏதாவது செஞ்சாத்தான் நா அம்பளன்ன ஒத்துக்குவியா..? டேய்.. இன்னும் ஏன் அவள புடிச்சிக்கினு இருக்கீங்க? கட்ட அவுத்து வுடுங்கடா.."
மீனாவைப் பிடித்திருந்த இருவரும் கட்டை அவிழ்த்துவிட்டு நகர்ந்தார்கள்.
மீனா எழுந்து நின்றாள். வாயில் கட்டியிருந்தத் துணியைக் கழற்றினாள். நிமிர்ந்து பெண்புலியைப் போல் வேந்தனைப் பார்த்தாள்.
'டேய் வேந்தா.. என்னை என்ன பட்டிக்காட்டு பத்தம்பசலின்னு நெனச்சிட்டியா..? நீ கைய கட்டி வாய கட்டி தாலி கட்டிட்டா.. நா ஒனக்கு பொண்டாட்டி ஆயிடுவேன்னு நெனச்சிட்டியா..? நாயே.. இந்தா நீ கட்டுன தாலி.."
சொல்லிக் கொண்டே கழுத்தில் இருந்த தாலியைக் கழற்றி.. எரிந்து கொண்டிருந்த அக்னியில் எறிந்தாள்!!!
அதை அதிர்ச்சியுடன் பார்த்த வேந்தன்.. வேதனையும் கோபத்துடனும் மீனாவை ஓங்கிக் கன்னத்தில் அறைந்தான். அந்த வேகத்தில் விழுந்த மீனாவின் தலை சுவற்றில் மோதி மயங்கி சரிந்தாள்!!
கண்விழித்துப் பார்த்த பொழுது அந்த மண்டபமே போர்க்கோலம் பூண்டு இருந்தது. அதிர்ச்சியுடன் பார்த்தாள். அவளருகில் வெற்றிவேல் சக்திவேலின் கழுத்தைப் பிடித்து இருக்கிக் கொண்டிருந்தான். லட்சுமணன் இரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்தான். வேந்தன் சிவாவுடன் கட்டிப்புரன்டு உருண்டு; கொண்டிருந்தான்.
இரண்டு ஊர்க்காரர்களும் ஒருவரை ஒருவர் கத்தி கம்பு கொண்டு தாக்கிக் கொண்டும் கட்டிப்புரண்டு உருண்டு கொண்டும் சண்டை போட்டுக் கொண்டும் இருந்தார்கள்!
மீனாவிற்குச் சில நொடிகள் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. குழப்பத்துடன் பார்த்தாள்! புரிந்த போது அதிர்ச்சியுடன் சக்திவேலை நோக்கினாள். அவன் கண்களில் மிருக வெறி! தன் கழுத்தைப் பிடித்திருந்த வெற்றிவேலின் கைகளைப் பிடித்துத் தள்ளினான். அவன் தள்ளிய வேகத்தில் வெற்றிவேல் நிலைதடுமாறி.. எறிந்து கொண்டிருந்த குத்துவிளக்கில் விழப்போனான்!
கண் இமைக்கும் நேரம் தான். மீனா.. சட்டென்று அவனைத் தடுக்க.. அவன் விழுந்த வேகம்.. கனம் தாங்காமல் அழுத்த.. குத்துவிளக்கின் கூரிய முனை மீனாவின் உள்ளங்கையில் நுழைந்து மேல் புறத்தில் வெளிவந்தது.
வெற்றிவேல் தன்னைச் சுதாரித்துக் கொண்டு எழுந்து கொண்டான். மீனா தடுத்திருந்திருக்கா விட்டிருந்தால்;.. குத்துவிளக்கின் முனை அவன் முதுகில் இறங்கியிருக்கும்.
ஏற்கனவே ஐந்து முகங்களில் எறிந்து கொண்டிருந்த விளக்கு! இரத்தத்துடன் எண்ணையில் பதிந்து கை சுடவும் மீனா வலி தாங்க முடியாமல் கத்தினாள்.
வெற்றிவேல் சட்டென்று அவளின் கையைப் பிடித்துக் குத்தியிருந்த குத்துவிளக்கை மெதுவாக உருவினான். சக்திவேல் அவளைத் தாங்கிப்பிடித்துக் கொண்டான். அவள் கையிலிருந்த மோதிரம் எண்ணையில் வழுக்கிவிழ வெற்றிவேல் அதை எடுத்து யாருக்கும் தெரியாமல் தன் பாக்கெட்டில் மறைத்தான்.
இரத்தம் ஊற்றிக் கொண்டிருந்த கையை அங்கே கிடந்த துண்டை எடுத்து கட்டினான் சக்திவேல். அவன் பின்னால் வேந்தன் கையில் பிச்சுவா கத்தியுடன்! மீனா கவனித்துவிட்டாள்! வேந்தன் சக்திவேலை ஆத்திரத்துடன் குத்தவர.. மீனா சக்திவேலை தன் பலங்கொண்ட மட்டும் தள்ளிவிட.. கத்தி அவள் இடுப்புப் பகுதியில் இறங்கியது.
யாரும் எதிர் பார்க்காமல் நிகழ்ந்தது தான்! ஆனால் இதை விபத்து என்று சொல்லிவிட முடியாது.
தன்னைக் குத்திவிட்டு இவன் ஏன் கண்களை விரித்து வாயைத் திறந்து கொண்டு.. என்ன இது..? ஏன்..? எதற்காக வேந்தன் இப்..ப..டி..? மீனா சிரமத்துடன் கண்களைத் திறந்து பார்க்க.. வேந்தனின் பின்னால் வெற்றிவேல் குரூர கண்களுடன்..
மீனா மயங்கிச் சரிந்தாள்!
----------------------------------------------------------------------------------------------------------------------
பண்பாடு என்பது நமது முன்னோர்கள் மற்றவர்கள் சரியான வழியில் வாழ்வை நடத்திச்செல்ல வேண்டும் என்பதற்காகப் போடப்பட்ட கட்டுப்பாடு!
ஒவ்வொரு நாட்டிலும் அவர்களின் பண்பாடு அம்மக்களின் மனத்தில் ஊறிப்போன மாற்ற முடியாத உணர்வுக்கூறு. அதை அவர்களால் தனது வழியில் தானே போக முடியாதவாறு இறுக்கிக் கொண்டிருக்கும் இதயத்தின் மௌனச் சங்கிலி;.
கலாச்சாரமும் பண்பாடும் கொஞ்சம் கொஞ்சமாகக் கீழ்நோக்கிப் போய்க் கொண்டே.. ஆனால் முடிவடைய முடியாத வீழ்ச்சியில் வீழ்ந்து கொண்டே இருப்பது தான்.
இது தவறு இல்லை. மக்கள் காலத்திற்குத் தகுந்தது போல் சங்கிலியைத் தளர்த்திக் கொண்டு விட்டார்கள். ஆனால் அதைக் கழற்றித் தூக்கிப் போட்டு விட இன்னும் அவர்களுக்குத் தைரியம் வரவில்லை.
ஆனால் மீனாவிற்கு அந்தத் தைரியம் அப்போழுது எப்படி வந்தது என்று தான் தெரியவில்லை!
தமிழ்க் கலாச்சாரத்திற்குக் கட்டுப்பட்டது தான் மஞ்சள் கயிறு என்றாலும் அவளுக்கு விருப்பமில்லாமல் கையைக் கட்டி வாயைப் பொத்திக் கழுத்தில் கட்டிவிட்டால்.. அது புனிதமாகி விடுமா..?
புனிதத் தன்மை பொருந்த மந்திரம் ஓதி கட்டப்பட்ட கயிறே.. மனப் பொருத்தம் இல்லாமல் நீதி மன்றத்தில் வாதாடி கழுற்றப் படும் பொழுது.. கட்டாயத்தில் கட்டப்பட்டதை உடனே கழற்றி எறிவது ஒன்றும் தப்பில்லையே..
ஆனால்.. ஒருமுறை ஒருவன் தாலிகட்டி விட்டாலும் அது திருமணம் தான். தாலியை உடனே கழற்றி எறிந்து விட்டாலும் அவள் திருமணம் ஆனவள் தான்! இப்படித்தான் சொல்கிறது பண்பாடு.. கலாச்சாரத்தில் ஊறிப்போன சமூகம்!
பாவம்!!
மனிதர்களுக்குத்தான் இந்தக் கட்டுப்பாடு!
சிங்கம் மானை அடித்துச் சாப்பிடுவது அதன் சுபாவம். இயற்கை. அதே போல் மான் சிங்கத்திடமிருந்து தப்பித்து ஓடி தன் உயிரை காப்பாற்றிக் கொள்வது மானின் சுபாவம்!
ஆனால் சிங்கத்தின் வாயில் கடிபட்டுப் பின்பு தப்பித்து வந்தால்.. அது மானின் குற்றமாகிவிடுமா..? இது தவறு என்று மான் இனம் அடிபட்ட மானைத் தள்ளி ஒதுக்கி விடுவது இல்லை!
மிருகங்களுக்குள் இந்த ஒற்றுமை குணம் இருக்கும் பொழுது மனிதர்களுக்கு இருக்காதா என்ன?
0 0 0 0 0 0
மீனா மெதுவாக எழுந்து நடந்து வந்து வராண்டா சோபாவில் அமர்ந்தாள். இடுப்பு மடிப்பில் இருந்த காயம் சிலீரென்று வலித்தது. நீ இன்னும் உயிருடன் தான் இருக்கிறாய் என்பதற்குச் சரியான சான்று தான் நம் உடலில் ஏற்படும் வலி!
இந்த வலித்தான் மீனா நீ இன்னும் உயிருடன் தான் இருக்கிறாய் என்று இந்தப் பத்து நாட்களாக அவளுக்கு ஞாபகப் படுத்திக் கொண்டிருந்தது.
மனம் மறுத்துப் போய் இருந்ததால்.. எதையும் அவள் இலட்ச்சியப் படுத்தவில்லை. இது சரியா..? தவறா..? என்ற எண்ணக் குழப்பங்கள் அவளை அலைகழிக்கவில்லை. என்ன நடந்தது? ஏன் நடந்தது? எதற்காக நடந்தது? பதிலைத் தேட மனம் ஏங்கவில்லை.
அவள் மனம் அந்த ஒன்றை மட்டுமே நாடியது! தேடியது! அதற்காகத் தான் அவள் வலியையும் பொருட்படுத்தாமல் எழுந்து வந்து சோபாவில் அமர்ந்து காத்துக் கொண்டிருந்தாள்.
'மீனா.. நீங்க உயரமான நாற்காலியில உட்காந்தா வசதியா இருக்கும்" அவளைக் கவனித்துக் கொள்ள நியமித்த நர்சு சொல்லவும் திரும்பவும் எழுந்திருக்கச் சிரமப்பட்டுக் கொண்டு அங்கேயே சாய்ந்து உட்கார்ந்தாள்.
இந்தப் பத்து நாட்களில் இரண்டு முறைதான் சக்திவேலுவைப் பார்க்க முடிந்தது. மருத்துவமனையில் மயக்கம் தெளிந்து கண்விழித்த போது.. அதோடு இரண்டு நாட்களுக்கு முன் டிச்சார்ஜ் ஆகி அவளை அழைத்துக் கொண்டு வந்த போழுது. அவ்வளவு தான்!
நடுவில் இருந்த நாட்களில் மருத்துவமனையில் அவளுடன் கூடவே இருந்து உதவியவர்கள் அவளுடைய நண்பர்கள் மட்டுமே.. உண்மையான நண்பர்களைச் சோதனையான நாட்களில் அடையாளம் கண்டு கொள்ள முடியும் என்ற கூற்றின் படி அவள் தன் நண்பர்களின் உண்மையான அன்பை நன்றாகப் புரிந்து கொண்டாள்!
மருந்துக்குக் கூட ஓர் ஊர்காரப் பெண்ணும் வந்து எட்டிக்கூட பார்க்கவில்லை. இதற்காக அதிக வேதனை அவள் மனத்தை வேக வைத்திருந்தது.!
கஷ்டத்தில் கை கொடுப்பவர்கள் நண்டர்கள் என்றால்.. விலகி இருப்பவர்களை விரோதி என்று எண்ணிவிட முடியுமா? அவளுடைய துன்பத்தைக் காணப் பொருக்காமல் மனத்தால் கலங்கிக் கொண்டு இருப்பவர்களும் இருக்கத் தானே செய்கிறார்கள்!
அப்படிச் சொல்லிக் கொண்டு தான் அவளைப் பார்க்க ஊர் மக்கள் அனைவரும் வந்து நலம் விசாரித்து விட்டுச் சென்றார்கள். மீனா யாரிடமும் முகம் கொடுத்துப் பேசவில்லை. அதிலும் அகிலாண்டேசுவரி அம்மாள் வந்த பொழுது.. மீனா நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. சற்று நேரம் பேசாமலேயே அவளருகில் அமர்ந்திருந்தவர்.. பேசாமலேயே எழுந்து போய் விட்டார்!
ஆனால் அறிவழகியிடம் அவளால் அப்படி நடந்து கொள்ள முடியவில்லை. கோபம் மனத்தில் இருந்தாலும் கண்கள் கருணையைத் தான் கக்கியது.
ஆனால் சக்திவேல்..?
'இப்போ எப்படி இருக்கு மீனா.." என்று கேட்க மாட்டானா.. என்று ஏங்கியது மனம்.
அதனால்; அவனை இன்று எப்படியாவது பார்த்துக் கேட்டுவிட வேண்டும்.. அதற்காகத் தான் அவள் காலையிலேயே அவன் வெளியே கிளம்புவதற்கு முன் எழுந்து வந்து காத்திருந்தாள்.
அவன் வருவதற்கு முன் அவளுடைய நண்பர்கள் வந்து நலம் விசாரித்தார்கள். சக்திவேல் மாடியிலிருந்து இறங்கி வந்தான். மீனாவைப் பார்த்து இலேசாகப் புன்முறுவல்!
(தொடரும்)
நடுவில் பகிர்ந்த கருத்துக்கள் அருமை... தொடர்கிறேன்...
ReplyDeleteEdhirpaaraadha thiruppangal. Thodarungal.
ReplyDeleteஆனாலும், நம்ம மீனாவை நீங்க ரொம்பக் கொடுமைப் பண்ணிட்டீங்க...
ReplyDelete