Thursday 4 October 2012

போகப் போகத் தெரியும் - 26



   மீனாவிற்கு மறுநாள் தான் தெரியும். அறிவழகி தன் மகளைப் பார்க்கமட்டும் வரவில்லை. அவளுக்கு ஒரு வரன் தேடிக் கல்யாணமும் பேசி இன்று நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டு தான் வந்திருக்கிறாள் என்று!
   மீனா தன் தாயிடம் கெஞ்சினாள். தனக்கு இப்பொழுது கல்யாணம் வேண்டாம் என்று! அறிவழகி எதையும் காதில் வாங்கவில்லை.
   மூன்று மணியளவில் மாப்பிள்ளை வீட்டார் காரில் வந்து சக்திவேல் வீட்டு கூடத்தில் கூடி அமர்ந்து இருந்தார்கள். மீனா அப்ஸரசாக அலங்கரிக்கப் பட்டாள். அழுது சிவந்த கண்களுடன்.
   அறிவழகி காபி டம்ளர் அடுக்கிய தட்டை மகளிடம் நீட்டினாள். மீனா வாங்கவில்லை. கோபமாகத் தன் தாயை முறைத்தாள்.
   'மொறைக்காதடி. நாமெல்லாம் நெனச்சமாதிரி வாழ முடியாத ஜென்மங்க. கெடைக்கிற வாழ்க்கைய நமக்கு தகுந்த மாதிரி வாழப் பழகிக்கணும். இந்தா புடி. போயி மாப்புள கிட்ட குடு." என்றாள் கவலையை விழுங்கின அதிகாரத்துடன்!
   மீனா தாயை நிமிர்ந்து பார்த்தாள். 'ஏம்மா.. நீ எதுக்குத் தனியா வாழ்ந்த? ஒம்மனசுல நெனச்சவன் கெடைக்கலன்னு தான.. ஏன் நீ வேற ஒருத்தன கட்டிக்கினு அவனுக்கு ஏத்தமாதிரி வாழ்ந்து இருக்கலாம் இல்ல? ஒனக்கு இருந்த மனசு எனக்கு இருக்கக் கூடாதா..?"
   'வேணாம் மீனா. வீணா புடிவாதம் புடிக்காத. எனக்கு வாழ்க்க கெடைக்கலன்னாலும் என்னைய வச்சி காப்பாத்த என் அண்ணன் இருந்தாரு. ஆனா நீ..? ஒனக்கு எனக்குப் பெறகு யாரு இருக்கா..? அனாதைங்க யதையும் ஆசப்படக் கூடாதும்மா.."
   அவள் ஆறுதலுக்காகத்தான் சொன்னாள். ஆனால் மீனா.. அந்த வார்த்தையில் உடைந்து போய்விட்டாள். 'அனாதை" இந்த வார்த்தையை எத்தனையோ பேர்கள் சொல்லியிருந்தாலும்.. தன்னை வளர்த்த தாயே இன்று தன்னை 'அனாதை" என்று சொல்லிக் காட்டியது வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சியதைப் போல் இருந்தது.
   அமைதியாக நின்று தன்னை ஒருநிலைப் படுத்தினாள். அறிவழகி கையில் இருந்த தட்டை வாங்கிக் கொண்டு கூடத்தை நோக்கி நடந்தாள். மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் திரும்பி இவளைப் பார்த்தார்கள். அவளுக்கு யாருக்கும் காபியைக் கொடுக்க மனம் வரவில்லை. சிலையாக நின்றுவிட்டாள்.
   அவள் கண்களில் தேங்கிய கண்ணீர் வைரம் போல் ஜொலித்தது. அன்பிற்காக ஏங்கி விடும் கண்ணீர் ஆண்டவனின் இதயத்தை உடனே தட்டிவிடுகிறது போலும்!
   'மீனா.. உள்ள போ."
   யார் அப்படி சொன்னார்கள் என்று அவளால் யோசிக்கவும் முடியவில்லை. பேசாமல் நின்றிருந்தவளை கமலா அழைத்துக் கொண்டு அறையினுள் சென்றாள்.
   சக்திவேலுவின் குரலைக் கேட்டதும் மரியாதைக்காக அனைவரும் எழுந்து நின்றார்கள். 'வா..தம்பி.." ஒரு பெரியவர் தான் வார்த்தையில் வரவேற்றார்!
   சக்திவேல் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
   'என்ன விசயமா வந்தீங்க..?" கேட்டான்.
   'நம்ம அறிவழகி பொண்ணு மீனாட்சிய எம்பையனுக்குப் பேசி முடிக்கலாம்ன்னு தான். பொண்ண பாத்தாச்சி. கையோட நிச்சயம் பண்ணிட வேண்டியது தான்." பையனின் அப்பா வெற்றிலை காவி பற்களைக் காட்டிச் சிரிப்புடன் சொன்னார்.
   'ம்.. நிச்சயம் பண்ணுறது இருக்கட்டும். நீங்க தான ஓடத்தூர்ல பொண்ணு பாத்துட்டு வேணாம்ன்னு சொல்லிட்டு வந்தவங்க?"
   'ஆமாம்பா. பொண்ணு ஒன்னும் ரொம்ப படிக்கலையாம். பத்தங்கிளாசு தானாம். அழகுகூடக் கம்மிதான். அதனாலத்தான் வேணாம்ன்னு சொல்லிட்டோம்." என்றார் பெருமையாக!
   'ஐயா மன்னிச்சிடுங்க. ஓடத்தூர்காரங்களுக்கும் இந்த ஊர்காரங்களுக்கும் கொஞ்சம் கூட ஒத்துவராது. நீங்க அங்க பொண்ணு பாத்துட்டு வேணாம்ன்னு சொல்லிட்டு எங்க ஊருல பொண்ணு எடுத்தா பிறகு பிரச்சனதான் வரும். அதனால இந்தப் பொண்ணுன்னு இல்ல. இந்த ஊருல வேற எந்தப் பொண்ணையும் கொடுக்கமாட்டோம். நீங்க சாப்ட்டு கௌம்புங்க."
   எழுந்து கைகூப்பி முடிவாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
   இவர்கள் துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு கிளம்பிப் போனார்கள்.
   'பாவம். அனாத பொண்ணு. நாய்கிட்ட கெடச்ச மட்டத்தேங்கா மாதிரித்தான். சின்னாபின்னமாவப் போவுது."
   அவர்களில் ஒருத்தி வேண்டுமென்றே அறிவழகி காது பட சொல்லிவிட்டு;ச் சென்றாள்!


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²
  
   'அம்மா. நா போயிட்டு வர்றேன்."
   மீனா நேற்று நடந்த நிகழ்ச்சி தன்னை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்பது போல மறுநாள் காலையில் கல்லூரிக்குக் கிளம்பிவிட்டாள்.
   கன்னத்தில் கைவைத்த படி அமர்ந்திருந்த அறிவழகி ஆவேசத்துடன் எழுந்தாள்.
   'ஏய் மீனா.. நில்லு. நீ ஒன்னும் காலேஜுக்கி போவவேணாம். நா பத்துமணி பஸ்சுக்கு ஊருக்கு போறேன். நீயும் எங்கூட வா." என்றாள் கோபமாக.
   'நானா.. எதுக்குமா..?" புரியாதவளாகக் கேட்டாள் மீனா.
   'எதுக்கா..? இனிமே நாம வாழப்போற எடம் என்னோட அண்ணன் வுடுத்தான். படிச்சது போதும். போயி துணியெல்லாத்தையும் எடுத்து வையீ." என்றாள் அதிகாரமாக.
   மீனா அதிர்ச்சியாகத் தன் தாயைப் பார்த்தாள். அறிவழகியின் பேச்சில் அதிக அழுத்தம் இருந்தது. என் இப்படி பேசுகிறாள்..? என்ன காரணமாக இருக்கும்? திரும்பிச் சக்திவேலைப் பார்த்தாள். அவன் இது எதையும் கவனிக்காதவன் போல் அன்றைய நாளிதழில் மூழ்கி இருந்தான்.
   அவனருகில் அகிலாண்டேசுவரியும் கமலாவும் இவளைப் பார்த்தபடி நின்றிருந்தார்கள். யாராவது தனக்காகப் பரிந்து பேச மாட்டார்களா..? ஏங்கியது மனம். ஆனால் அவளுக்காக யாரும் பேச முன் வரவில்லை.
   'ஏய்.. சொல்றனில்ல. போயி துணிமணியெல்லாம் எடுத்துகினு கௌம்பு." திரும்பவும் அறிவழகி கத்தினாள்.
   தனக்காகப் பேச மற்றவர்கள் வரவில்லை என்றால் என்ன? தனக்குக் தைரியம் இல்லையா.. என்ன..?
   'நா வரமாட்டேன்.." அழுத்தமாகச் சொன்னாள்.
   'வரமாட்டியா..? ஏன்..?"
   'நா படிக்கணும்."
   'அங்க வந்து படிச்சிக்கோ."
   'முடியாது. நா அங்க வந்தா ஒன்அண்ண பசங்க என்ன படிக்கவுட மாட்டானுங்க. நா மாட்டேன்."
   அவள் அப்படி சொன்னது தான் தாமதம்! அறிவழகி அறிவிழந்து தன் மகளின் முடியைக் கொத்தாகப் பிடித்து முகத்தில் அறைந்தாள்.
   'ஏன்டீ.. அனாத நாயே.. நா சொல்றதுக்கு எதுத்தா பேசுற. ஒனக்காகவே வாழ்ந்தேனே.. ஒன்னோட சந்தோசம் தான் என்னோட சந்தோசம்ன்னு நெனச்சேனே.. என்னையா எதுத்துப் பேசுற? போ.. போயி கௌம்பு."
   'நா அங்க வரமாட்டேன்." அடியையும் வலியையும் பொருட் படுத்தாமல் மீனா நிமிர்ந்து நின்று சொன்னாள்.
   'வர மாட்டியா.. வரமாட்டியா..?" அறிவழகி அழுது கொண்டே மேலும் மேலும் அடித்தாள்.
   ஓர் அளவுக்கு மேல் பொருக்காத சக்திவேல் எழுந்து வந்து சட்டென்று அவள் கையைத் தடுத்தான்.
   'அத்தே.. மொதல்ல அவள அடிக்கிறத நிறுத்துங்க."
   அவன் கண்கள் சிவக்கக் குரலை ஓங்கிச் சொன்னான். அறிவழகி தன் மகளை அடிப்பதை நிறுத்திவிட்டு இவனிடம் திரும்பினாள்.
   'தோ பாருப்பா. இவ என் பொண்ணு. அவள அடிக்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. நீ இதுல தலையிடாத.." அவனைப் பார்த்துச் சொல்லிவிட்டு மீனாவிடம் திரும்பினாள்.
   'ஏய்..மீனா.. எழுந்து கௌம்பு. அனாத நாயே.. ஒனக்கு பொறப்புதான் சரியில்ல. ஜாதகமாவது சரியா இருந்துச்சா..? எல்லாம் ஒன்னோட தலஎழுத்து. இனிமே உன்னைய இங்க வுட்டுட்டு போவ முடியாது.. ஏதோ அனாதய எடுத்து வளத்துட்டன். ஒன்ன எவங்கையிலயாவது புடிச்சி குடுத்துட்டா.. எனக்கு ஒரு தொல்ல ஒழியும். ம்.. கௌம்பு." கத்தி பேசினதில் மூச்சி இறைத்தது.
   மீனா பேசாமல் தரையில் கால்களைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
   'எந்திருடி நாயே.. எந்திருக்கமாட்ட..?" மேலும் அடிக்கப் போனவளின் கையைச் சக்திவேல் கோபமாகப் பற்றினான். அவன் முறைத்த பார்வை அவளைப் பயங்கொள்ள வைத்தது.
   'தோ பாருப்பா. இது எனக்கும் எம்மவளுக்கும் நடக்கிற பிரச்சன. இவள இனிமேல இங்க வுட்டுவக்க முடியாது." சற்றுக் குரல் தணிந்து சொன்னாள்.
   'ஏன்.. என்னக்காரணம்..?" புருவங்கள் முடிச்சிடக் கேட்டான்.
   'எனக்கு ஒடம்புக்கு முடியல. என்னோட அண்ணனும் படுத்த படுக்கையாத் தான் இருக்காரு. எனக்காக எவ்வளவோ செஞ்ச அவருக்கு நா இப்போ ஒதவியா இருக்கோணும். அதுக்குத்தான் இவளுக்குக் கல்யாண ஏற்பாடு செஞ்சேன். கடைசில அது முடியாம போயிடுச்சி. அந்த வேந்தங்கிட்ட மாட்டி இவ சின்னா பின்னமாறத விட எங்கண்ணன் புள்ளைங்க யாருக்காவது கட்டி வச்சிட்டா எங்கடமை முடிஞ்சிடும். அதுக்கு தான். மீனா புடிவாதம் புடிக்காத. எந்திறுச்சி கௌம்பு." அதட்டினாள்.
   'அத்த.. அவ வரமாட்டா. நீங்க வேணா கௌம்பிப் போங்க." நிதானமாகச் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தாள்.
   'இவ்ளோ உரிமயா சொல்லுற.. நீ அவள கட்டிக்கிறியா..? சொல்லு. இப்டியே வுட்டுட்டு போயிடறேன்."
   ஒரு விரலை உயர்த்திக் காட்டிக் கேட்டாள் அறிவழகி!
   அவள் அப்படிக் கேட்டதும் அழுது கொண்டு அமர்ந்திருந்த மீனா கண்களைத் துடைத்துக் கொண்டு சக்திவேலை நிமிர்ந்து பார்த்தாள். அகிலாண்டேசுவரி கமலாவின் பார்வையும் சக்திவேலின் மீது பதிந்து இருந்தது.
   அவன் ஒரு நிமிட யோசனைக்கு பின் சொன்னான்.
   'நா அவள கட்டிக்கிறதும் கட்டிக்காததும் வேற விசயம். அவள நா படிக்க வைக்கிறேன்னு வாக்கு குடுத்து இருக்கேன். அவ படிச்சி முடிக்கிற வரைக்கும் என்னோட கண்கணிப்புலயே இருக்கட்டும். நீங்க கௌம்புங்க.' என்றான்.
   'முடியாது. இனிமேல அவள நா இங்க வுட்டுவைக்க முடியாது. அது மொறையுங் கெடையாது." அவனுடைய பதில் இவளை அலட்சியப் படுத்திப் பேச வைத்தது.
   இதையெல்லாம் கவனித்த மீனா வெறுமையாகச் சிரித்தாள். எழுந்தாள். தாவணியைச் சரி செய்தாள். கலைந்த தலைமுடியைச் சரி செய்து க்ளீப் வைத்தாள். அறிவழகியைப் பார்த்தாள்.
   'அம்மா.. நா இங்க இருக்கிறது தான ஒனக்கு புடிக்கல. நா இனிமே இங்க இருக்க மாட்டேன். போதுமா..? அதுக்காக ஒன்னோட அண்ணன் வீட்டுக்கும் வர மாட்டேன். ஆஸ்டல்ல தங்கிக்கினே அங்கேயே இருந்துகினே படிக்கிறேன் போதுமா..? நீ கௌம்பு. ஒன்னோட வீராப்பு கொணத்துக்காக என்னோட படிப்ப என்னால வீணாக்க முடியாது. எனக்கு நீயும் வேணாம். இவங்களும் வேணாம். நா அனாத தான். ஏதோ எடுத்து வளத்தியே.. ஒனக்கு பெரிய கும்பிடு. அவுங்க படிக்க பணம் கட்டி சோறு போட்டாங்க. உங்களுக்கும் ரொம்ப நன்றி. இனிமே நா யாருக்கும் பாரமா இருக்கவிரும்பல. நா கௌம்புறேன்."
   கீழே சிதறிக் கிடந்த புத்தகங்களை எடுத்துக் கொண்டு நடந்தாள்.
   வானம் கடைசியாக இருந்த மழைநீரை வடிகட்டியது. இன்னும் சற்று நேரத்தில் வெறுமையாகிவிடும். மீனாவின் மனத்தைப்போல!
                     

                              (தொடரும்)

2 comments :